புதுசு

இந்தியர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஜப்பான்: ஜனவரி 1 முதல் அமல்

இந்தியர்களுக்கான விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
இதன் மூலம் குறுகிய காலத்தில் பலமுறை ஜப்பானுக்கு இந்தியர்கள் சென்றுவர முடியும். இந்தியத் தொழிலதிபர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இதன் மூலம் அதிக பயன் கிடைக்கும் என்று தில்லியில் உள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தவிர ஜப்பானுக்கான விசா விண்ணப்பப் படிவமும் எளிதாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜப்பான் செல்லும் இந்தியர்களின் பணி தொடர்பான ஆவணங்களையும், ஜப்பான் செல்வதற்கான காரணம் குறித்த விளக்கக் கடிதத்தையும் இனி அளிக்க வேண்டியது இருக்காது. ஜப்பானுக்கு குறுகிய காலத்தில் பலமுறை சென்று வருவதற்காக விசா பெறுவதற்கு புகைப்படத்துடன் கூடிய விசா விண்ணப்பம், தங்களுடைய நிதி நிலைக்கான சான்றுகள் (சுற்றுலா காரணங்களுக்காக) ஆகியவற்றை அளிக்க வேண்டும். தொழில் முறையாக ஜப்பான் செல்ல விரும்புவோர் தங்கள் தொழில் விவரம் அல்லது பணியாற்றும் தொழில் நிறுவனத்தின் சான்றிதழை அளிக்க வேண்டும்.

ஜப்பானுக்கு பலமுறை சென்று வருவதற்காக வழங்கப்படும் விசா 5 ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாகும். இதனைப் பயன்படுத்தி ஓராண்டில் 90 நாள்கள் வரை ஜப்பானில் தங்கியிருக்கலாம்.

ஜப்பான் செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் தங்கள் நிதி நிலை தொடர்பான சான்றிதழை அளிக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக மாணவர் என்பதற்கான சான்றை அளித்தால் போதுமானது. இந்தியா-ஜப்பான் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தில்லியில் உள்ள அந்நாட்டுத் தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments