புதுசு

3 நாட்களில் ராக்கெட் தயாரிக்க இஸ்ரோ திட்டம்



செயற்கைக்கோள் வரலாற்றில் புதிய புரட்சியாக வெறும் மூன்றே நாட்களில், அதுவும் குறைந்த செலவில் ராக்கெட்டை தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
தற்போது வரை இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் செயற்கைகோள் அனைத்தும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமே விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை தயாரிக்க பொதுவாக 30 முதல் 40 நாட்கள் வரை ஆகும். உலகம் முழுவதும் செயற்கை கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்களை தயாரிக்க பொதுவாக ரூ.150 கோடி முதல் ரூ.500 கோடி வரை ஆகும்.

தற்போது குறைந்த விலையில் இஸ்ரோ ராக்கெட் தயாரிக்க உள்ளது குறித்து விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் கே.சிவன் கூறுகையில், சிறிய அளவிலான ராக்கெட்டை தயார் செய்யும் முயற்சியில் இஸ்ரோ இறங்கி உள்ளது. இது 2018 இறுதி அல்லது 2019 ம் ஆண்டின் துவக்கத்தில் விண்ணில் செல்ல தயாராகி விடும். இதற்காக ஆகும் செலவு, பொதுவாக பிஎஸ்எல்வி தயாரிக்க ஆகும் செலவில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே ஆகும். இந்த ராக்கெட்டில் மொத்த 500 முதல் 700 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளதாக இருக்கும். இது புவியின் சுற்றுவட்டப்பாதை அல்லது சூரியனின் சுற்றுவட்டப்பாதை வரை செல்லும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மினி பிஎஸ்எல்வி.,யின் எடை வழக்கமான 300 டன்களுக்கு பதிலாக வெறும் 100 டன்கள் மட்டுமே இருக்கும். குறைந்த விலையில் இது போன்ற பல சிறிய ரக ராக்கெட்களை தயார் செய்யவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இவைகள் பல்வேறு நானோ ரக செயற்கை கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments