புதுசு

ஐரோப்பா செல்ல முயன்ற குடியேறிகளின் படகு கவிழ்ந்து 31 பேர் பலி
லிபியா கடற்கரையில் கடந்த சனிக்கிழமையன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 31 குடியேறிகள் உயிரிழந்தனர். மற்றொரு படகுடன் மத்திய கடற்பகுதியை கடக்க முயன்ற போது ஏற்பட்ட இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் பல குழந்தைகளும் அடக்கம். 

விபத்தினையடுத்து தண்ணீரில் தத்தளித்த சுமார் 60 பேர் மீட்கப்பட்டனர். மற்றொரு படகில் இருந்த 14 பேர் திரும்ப அழைத்துவரப்பட்டனர். 


மிதமான வானிலை மற்றும் கடல் சீற்றம் ஏதும் இல்லாத காரணத்தினால், லிபியாவை விட்டு ஐரோப்பாவிற்கு செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமையன்று 250 பேர் லிபியா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.


 அதே போல, செவ்வாய்கிழமையன்று 1,100 பேரை மீட்டுள்ளதாக இத்தாலி கடற்படை தெரிவித்துள்ளது. லிபிய தலைநகர் திரிபோலிக்கு சுமார் 37 மைல்கள் (60 கிலோ மீட்டர்) தூரத்தில் உள்ள கராபுலி நகர கடற்கரையில் இந்த படகு விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தை சென்றடையும் முன்பே முதல் ரப்பர் படகு கவிழ்ந்து கிடந்ததாக லிபியா கடற்படை கர்னல் அபு ஆஜலா அப்டெல்பரி தெரிவித்தார்.


அபாய சமிக்ஞை கேட்டபின் சம்பவ இடத்திற்கு சென்றபோது, ஒரு சிலர் எஞ்சியிருந்த படகில் தப்பித்திருக்க, மற்றவர்கள் உயிரிழந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். பின்பு அவர்கள் திரிபோலியின் கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். 

''எப்போதும் இல்லாத அளவுக்கு சமீப காலங்களில், குடியேறுபவர்களை ஐரோப்பிய கடற்கரைகளுக்கு படகில் அனுப்ப, காலநிலை சூழ்நிலைகள் சாதமாக உள்ளது'' என கர்னல் அபு தெரிவித்தார்.

குடியேறுபவர்களின் 'ஆபத்தான பயணம்' எனக் கருதப்படும் மத்திய கடலில் பயணம் செய்த போது 2000 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சுமார், 33,000 பேர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயிருப்பர் என குடியேறுபவர்களுக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. 

மத்தியகடல் பகுதியை கடக்க முயன்ற போது இந்தாண்டு மட்டும் சுமார் 3000 குடியேறிகள் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது.


By: BBC TamilNo comments