புதுசு

தூத்துக்குடி ஆயுதக் கப்பல் வழக்கு: 35 பேரும் விடுதலை


2013ஆண்டில் தூத்துக்குடியை ஒட்டியுள்ள இந்தியக் கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட கப்பலின் பணியாளர்கள் அனைவரையும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விடுவித்துள்ளது.
2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதியன்று அமெரிக்காவைச் சேர்ந்த கப்பலான 'ஸீமேன் கார்ட் ஒஹையோ' இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக தடுத்து நிறுத்தப்பட்டது. அதிலிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து கப்பலில் இருந்த 35 பேரையும் தமிழகக் காவல்துறையின் க்யூ பிராஞ்ச் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த 35 பேரில் பன்னிரெண்டு பேர் இந்தியர்கள். 23 பேர் வெளிநாட்டவர். வெளிநாட்டவர்களில் ஆறு பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். மீதமிருந்தவர்கள் உக்ரைன் மற்றும் எஸ்தோனியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கப்பல் அத்வான் ஃபோர்ட் என்ற அமெரிக்க நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பலான நாயகிதேவியால் அக்டோபர் 12ஆம் தேதியன்று இடைமறிக்கப்பட்ட ஸீமேன் கார்ட், தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இவர்கள் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இந்தியக் கடற்பரப்பிற்குள் கொண்டுவந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு நடைபெற்று வந்தது. சுமார் 9 மாதங்கள் சிறையில் இருந்த கப்பலின் பணியாளர்கள் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
இந்த வழக்கில் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில், இந்த பணியார்கள் அனைவருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
கப்பலின் தரப்பில் இந்த வழக்கில் வாதிட்டபோது, தாங்கள் இடைமறிக்கப்பட்டபோது இந்தியக் கடற்பரப்பிலேயே இல்லை என்றும் தங்களிடமிருந்த 6 செமி - ஆட்டோமேடிக் ரக துப்பாக்கிகளுக்கு முறையான ஆவணங்கள் இருந்தன என்றும், தாங்கள் அனைவருமே முன்னாள் ராணுவ வீரர்கள், தங்களால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறப்பட்டது. மேலும், தாங்கள் வைத்திருந்த ஆயுதங்கள் கடற்கொள்ளையர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்தன என்றும் கூறப்பட்டது.
இந்த வழக்கில் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தப்பட்டு, 35 பேரும் விடுவிக்கப்படுவதாக கூறியது. குற்றம்சாட்டப்பட்டவர்கள், கீழமை நீதிமன்றத்தில் விண்ணப்பித்து தங்கள் பாஸ்போர்ட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments