புதுசு

நாகை மீனவர்களிடம் நடுக்கடலில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் வலைகளை பறித்து சென்ற மர்மநபர்கள்




நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் முகாமிட்டு மீன்பிடித்து வருகிறார்கள். நாகையை அடுத்த நாகூரை சேர்ந்த ரவி, மூர்த்தி, செல்வகுமார் ஆகிய 3 மீனவர்கள் ஒரு பைபர் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென் கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த அவர்களிடம், ஒரு படகில் வந்த சிலர், அவர்களை சுற்றிவளைத்துள்ளனர். பின்னர் நாகை மீனவர்களின் படகில் ஏறி, அவர்கள் படகில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் வலைகளை பறித்துள்ளனர். 

மேலும் இந்த பக்கம் வந்து மீன்பிடிக்கக்கூடாது என்று மிரட்டி விட்டு அவர்களது படகில் ஏறி தப்பி சென்றுள்ளனர். இன்று காலை 9 மணியளவில் கரை திரும்பிய மீனவர்கள் இந்த சம்பவத்தை பற்றி சக மீனவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறும் போது, மீன்கள் மற்றும் வலைகளை பறித்து சென்றது இலங்கை மீனவர்களா? அல்லது கடற் கொள்ளையர்களா? என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி வந்து விட்டோம் என்று கூறினர். இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் படையினரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 

கடந்த 15-ம் தேதி நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதன்பிறகு கடந்த 17-ம் தேதி கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்தனர். தொடர்ந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது நாகை மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments