புதுசு

சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு : 6 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவுராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு 6 வாரத்திற்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரதிய ஜனதா மூத்த நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவித்து, அதற்கு சேதம் ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது மனுதாரர்களின் கோரிக்கை. ராமர் பாலத்தை இடிப்பதால் மத நம்பிக்கை பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்பதால் ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உட்பட மூவர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சுப்பிரமணிய சுவாமி, இவ்வழக்கில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் 10 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதன் பிறகு வாதத்தை தொடர்ந்த மத்திய அரசு வழக்கறிஞர் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பதிலளிக்க அவகாசம் கோரினார். இதனை ஏற்ற நீதிபதிகள் 6 வார காலத்திற்குள் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.  

No comments