புதுசு

வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு



சென்னை: வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடல் பகுதியில் மழை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், நேற்று, தென்மேற்கு வங்க கடல்பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும்(நவ.,12) தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. ஏறத்தாழ 2 ஆயிரம் சதுர கி.மீ., அளவில் கடல் பகுதியில் பரவியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால் மேகக்கூட்டங்கள் நிலப்பகுதி நோக்கி வரும் போது காற்றின் வேகம் திசைமாற்றம் காரணமாக பெரும்பாலான மழை கடல் பகுதியில் பெய்துவிட்டது. இதனால் நில பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பதிவாகவில்லை.

சென்னையில்

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது .சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க மழை பெய்யவில்லை. சென்னை டிஜிபி அலுவலகம், கன்னியாகுமரியில் தலா 5 மி.மீ., மழையும் மகாபலிபுரம், குளச்சல், திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் 4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

No comments