புதுசு

கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர்: இப்படி ஒரு மெகா திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா?
ஆந்திராவில் ஓடும் கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் எடுத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பூமிக்கடியில் ராட்சத குழாய்கள் அமைத்து பலநூறு கிலோ மீட்டர் தண்ணீர் கொண்டுவருவது இந்த திட்டத்தின் அம்சம் ஆகும். இப்படி ஒரு மெகா திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. இந்தியாவில் பாயும் முக்கிய நதிகளில் ஒன்றான கோதாவரியில் இருந்து ஆண்டுக்கு 3000 டி.எம்.சி தண்ணீர் யாருக்கும் பயணில்லாமல் வீணாக கடலில் கலக்கிறது. இதனை பயனுள்ளதாக்க திட்டமிட்டுவரும் மத்திய அரசு, 


முதற்கட்டமாக தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க 100 டி.எம்.சி நீரை காவிரிக்கு கொண்டுவரும் மெகா திட்டத்தை வித்திட்டுள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த மெகா திட்டம் செயல்படவுள்ளதாக மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி கூறியுள்ளார். 


ஆந்திராவில் இருந்து விஜயவாடா, நெல்லூர் வழியாக கோதாவரி நீரை தமிழகத்திற்கு எடுத்து வருவது அவ்வளவு சுலபான காரியமில்லை. பூமிக்கடியில் ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துவர திட்டமிடப்பட்டாலும் அதற்காக நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட பிரச்சனைகள் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும். அத்துடன் இத்திட்டம் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் அபாயகரமான திட்டம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

தமிழகத்தில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சனையை போக்கவே இந்த திட்டம் என்றாலும் அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இந்த பணம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தினாலும் பெரும் தொகையை முதலீடு செய்யும் மத்திய அரசு, போட்ட பணத்தை திரும்ப பெற முயற்சிக்கும். ஆதலால் வாகனங்கள் செல்லும் சாலைகளை விற்றது போன்று தண்ணீரையும் பணமாக்கும் நடவடிக்கையே இந்த திட்டம் என்பது சமூக ஆர்வலர்களின் புகார் ஆகும். கோதாவரி நீரை தமிழகத்திற்கு கொண்டுவரும் இந்த மெகா திட்டம் உண்மையிலேயே நல்ல திட்டம் என்றாலும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது. முன்னாள் பிரதமர் பாஜ்பாய் காலத்திலேயே போடப்பட்ட நதிநீர் திட்டம், இதுவரை சாத்தியமாகாத நிலையில் பாஜக அரசின் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

No comments