புதுசு

மும்பை சிறையில் மல்லையாவை அடைக்க திட்டம்
லண்டனிலிருந்து இந்தியாவிற்கு தொழில் அதிபர் மல்லையா நாடு கடத்தப்பட்டால், அவரை மும்பை, ஆர்தர் சாலையில் இருக்கும் சிறையில் அடைக்க உள்ளோம் என இங்கிலாந்து கோர்ட்டில் தெரிவிக்க உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கோர்ட்டில் மல்லையா புகார்
கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர், விஜய் மல்லையா, 'கிங்பிஷர்' விமான சேவை நிறுவனம் துவக்க, பல்வேறு வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தவில்லை. அவருக்கு எதிராக, நீதிமன்றத்தில், வங்கிகள்,வழக்கு தொடர்ந்தன. கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டதும், விஜய் மல்லையா, பிரிட்டன் தலைநகர், லண்டனுக்கு தப்பியோடினார். மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி, மத்திய அரசு தரப்பில், பிரிட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. லண்டன் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன், அவனுக்கு, ஜாமின் வழங்கி உள்ளது. அவரை, நாடு கடத்தக்கோரும் மனு மீதான விசாரணை, லண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், டிச., 4ம் தேதி துவங்க உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, மல்லையாவை நாடு கடத்தப்பட்டால், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது இந்திய சிறைகளில் மனித உரிமை மீறல்கள் அதிகளவு நடப்பதாக அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

தவறான தகவல்
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: மல்லையா நாடு கடத்தப்படுவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் போது, மல்லையா நாடு கடத்தப்பட்டால், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஆர்தர் சிறையில் அடைக்கும் திட்டம் உள்ளது. சிறையில் அடைக்கப்படும் நபர்களை பாதுகாப்பது மாநில அரசின் கடமையாகும். தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மல்லையா கூறுவது தவறான தகவல். இந்திய சிறைகள், மற்ற நாடுகளில் உள்ள சிறைகளை விட சிறந்தது. சிறை கைதிகளின் உரிமைகளும் முழு அளவில் பாதுகாக்கப்படுகிறது. மும்பை சிறையில், கைதிகளுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன. முழு பாதுகாப்புடன் மல்லையா அங்கு இருப்பார். இந்தியாவில் நடக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே உயிருக்கு ஆபத்து. மனித உரிமை மீறல் என மல்லையா பொய் சொல்கிறார் என இங்கிலாந்து கோர்ட்டில் தெரிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments