புதுசு

உலகின் மிக மோசமான நீர்மூழ்கி கப்பல் விபத்துகள்


காணாமல் போன ஏ ஆர் ஏ சான் ஹுவான் என்ற அர்ஜென்டினாவின் நீர்முழுகி கப்பலில் 44 பேர் உள்ளனர். காணாமல் போனதற்கான காரணம் இன்னும் தெளிவுபடாத நிலையில், நீர்முழுகிக் கப்பல் வெடித்து சிதறியிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த சந்தேகம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், அதில் இருப்பவர்கள் உயிரோடு கண்டுபிடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அது மட்டுமில்லாமல், பயங்கரமான நீர்முழுகிக் கப்பல் பேரழிவுகளின் பட்டியலில் சன் குவானும் சேர்ந்துவிடும். இது போன்ற பல அழிவுகள், போரினால் அல்லாமல் விபத்துகளால் நிகழ்ந்தவையாகும்.
யூஎஸ்எஸ்திரெஷர் (1963)
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில், கேப் காட் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த நீர்முழுகி கப்பல் மூழ்கியதில் அதிலிருந்த 129 ஆண்கள் உயிரிழந்தனர். இயந்திர கோளாறு காரணமாக மூழ்கிய இக்கப்பல் உள்ளிருந்து வெடித்து சிதறியது. கடலுக்கு அடியில் 2,500 மீட்டர் ஆழத்தில் இடிபாடுகள் 

குர்ஸ்க் (2000)
நார்வே மற்றும் ரஷ்யாவுக்கிடையில், பாரென்ட்ஸ் கடற்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரஷிய நீர்முழுகி கப்பல் ஒன்று, எரிபொருள் கசிவுனால் இரண்டு முறை வெடித்தது. 118 குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்தனர். அதில் 23 பேர் தப்பித்து பின்புற பெட்டிகளில் உதவிக்காக காத்திருக்க, மீட்பு முயற்சிகள் தொடங்கிய ஒரு வாரத்திற்குபின் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
யூஎஸ்எஸ்ஸ்கார்பியான் (1968)
அட்லான்டிக்கின் அசோர்ஸ் தீவுகளுக்கு 400 மைல்கள் தென்மேற்கில் காணாமல் போன இந்த அமெரிக்க நீர்முழ்கிக் கப்பலில் இருந்த 99 பேர் உயிரிழந்தனர். கப்பலில் இருந்த டார்பெடோ எனப்படும் வெடி தெரியாமல் செயல்படுத்தப்பட்டதில் நிகழ்ந்த இந்த விபத்தின் இடிபாடுகள் ஐந்து மாதங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன.


ஹெச்எம்எஸ் தெடிஸ் (1939)
ஐரிஷ் கடலில், இங்கிலாந்து கடற்கடையோரம் உள்ள லிவர்பூல் வரிகுடாவில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இங்கிலாந்தின் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியது. அதலிருந்த 103 மாலுமிகளில், 4 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
கே -129 (1968)
பசிபிக் பெருங்கடலில், அணு ஆயுத ஏவுகணையை ஏந்திச் சென்று, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரஷியக்கப்பல் ஒன்று மூழ்கியதில் 98 பேர் கொல்லப்பட்டனர். ஹவாயன் தீவில் உள்ள ஒஹுவாவின் வடக்கே இருந்த இடிபாடுகளை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பின்னர் கண்டுபிடித்தது.
அமெரிக்கக் கப்பல் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது உள்ளிட்ட பல கூற்றுகள் சொல்லப்பட்டும், வாஷிங்டன் இதனை மறுத்துவிட்டது. அமெரிக்க கடற்படையின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி இந்த விபத்து கப்பலினுள் நிகழ்ந்த வெடிப்பால் ஏற்பட்ட பேரழிவு என்று கூறப்பட்டது.
மிங் 361 (2003)
சீனாவின் வடகிழக்கில் உள்ள பொஹாய் கடலின் சாங்ஷான் தீவுகளில் பயிற்சியில் இருந்த சீனக்கப்பலில், டீசல் இயந்திர செயலிழப்பு ஏற்பட்டது. இதனால் பிராண வாயு குறைய அதிலிருந்த 70 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதுபோன்ற ஒரு விபத்தை சீனா வெளிப்படுத்தியது அதுவே முதல்முறையாகும்.
கே- 8 (1970)
ஸ்பெயின் நாட்டின் வடக்கே பிஸ்கே வரிகுடாவில், மின்சார கோளாறு ஏற்பட்டு ரஷியக் கப்பல் தீப்பிடித்து மூழ்கியதில் 52 மாலுமிகள் கொல்லப்பட்டனர். சம்பவத்தில் சிலர் மட்டுமே உயிர்பிழைத்தனர். ஆனால் அதன் சரியான எண்ணிக்கையை அந்நாடு வெளியிடவில்லை.
கே - 278 கம்சொமொலெட்ஸ் (1989)
நார்வே கடற்பகுதியில், ரஷியக் கப்பலில் ஏற்பட்ட தீயினால் முழு மின்சார இழப்பு ஆகியதில் அதிலிருந்த 69 உறுப்பினர்களில் 49 பேர் உயிரிழந்தனர்.
எஸ்எஸ்-109 (1927)
அமெரிக்காவின் மசசுசெட்ஸ் மாநிலத்தின் கேப் காட் அருகே, அந்நாட்டு கடலோர காவல்படை கப்பல் ஒன்று நீர்மூழ்கிக் கப்பல் மீது மோதியதில் 40 பேர் உயிரிழந்தனர். அதிசயமாக, விபத்து ஏற்பட்ட ஓராண்டிலேயே அந்த கப்பல் மீண்டும் சேவைக்கு திரும்பியது. 1936 ஆம் ஆண்டு நீக்கப்படும் வரை அக்கப்பல் நல்ல செயல்பாட்டில் இருந்தது

நன்றி:bbc tamil

No comments