புதுசு

தேசிய கல்வி நாள் || மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் || சிறப்புப் பார்வை
இன்றைய தேதி நவம்பர் 11. இந்தியத் திருநாட்டின் விடுதலை இயக்கத்தின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் அவர்களின் பிறந்த நாள். ஆண்டுதோறும் இந்த நாள் 'தேசியக் கல்வி நாள்' எனக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் அறிஞர் ஆஸாத் அவர்களைச் சற்று நினைவுக் கூர்வோம். 

மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் இந்தியத் தந்தைக்கும், அரபியத் தாய்க்கும் மகனாக 1888 ம் ஆண்டு அராபிய நாட்டின் மக்காவில் பிறந்தார். தனது 10 வயது வரை மக்காவிலும், மதீனாவிலும் அரபி மொழியில் கல்வி பயின்றார். தந்தையிடம் உருது மொழியைக் கற்றார். 1898 ம் ஆண்டு குடும்பம் இந்தியா திரும்பியபின் ஒரு மவ்லவியிடம் கல்வி பயில அனுப்பப்பட்டார்.

'காசேஸ நிஜாமி' என்பது மொழி, தத்துவம், தர்க்கம், கணிதம், நிலவியல், வரலாறு ஆகியவை அரபிப் பாட வகுப்பாகும், அதனை முடிக்க சாதரணமாக 14 ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் ஆஸாத் அவர்கள் அப்பாடத் திட்டத்தை நான்கே ஆண்டுகளில் முடித்துவிட்டுத் தமது பதினான்காம் வயதில் 'மவ்லானா' என்று அழைக்கப்பட்டார். அப்போது அரபியிலோ, பாரசிகத்திலோ அவர் படிக்காத நூல்களே இல்லை. தம்முடைய பதினைந்தாவது வயதில் முழுக் குர்ஆனை மனப்பாடம் செய்து 'ஹாபிஸ்' பட்டத்தைப் பெற்றார். ஆஸாத் அவர்கள் ஆங்கிலக் கல்வியைப் பள்ளியில் கற்கவில்லை. தாமாகவே அகராதிகளின் துணைக்கொண்டு ஆங்கிலத்தைத் தமது சொந்த முயற்சியால் கற்று ஓர் ஆங்கிலப் பேராசிரியரின் அறிவுக்கு இணையான அறிவைப் பெற்றார்.

தமது 20 வயது வரை கல்வி ஞானம் தேடுவதிலேயே காலத்தைக் கழிக்க மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் அவர்களுக்கு வாலிப வயது எட்டியபோது நாட்டு விடுதலைப் பற்றிய உணர்வு உண்டானது. அதற்காக முதலில் அவர் தேர்ந்தெடுத்தது எழுத்துத்துறை. தமது 24 வது வயதிலே 1912 ம் ஆண்டு 'அல் ஹிலால்' என்ற உருது வார இதழைத் தொடங்கினார். தேசிய நீரோட்டத்திலிருந்து முஸ்லீம்களை ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்த, அந்நிய ஆட்சிக்கு சூலவட்டம் சூட்டிக்கொண்டிருந்த பிற்போக்கு சக்திகளை அந்த இதழ் நடுங்க வைத்தது.

இந்திய விடுதலை இயக்கத்தில் இந்துக்கள், சீக்கியர்கள், பார்சியர்கள் ஆகியோருடன் முஸ்லீம்களும் ஓரணியில் நின்றுப் பணியாற்ற வேண்டும் என்று 'அல் ஹிலால்' குரல் எழுப்பியது. முஸ்லீம்களிடையே மாபெரும் புரட்சியை அந்த இதழ் எழுப்பியது. முஸ்லீம்களிடையே மாபெரும் புரட்சியை அந்த இதழ் எழுப்பியது. அல் ஹிலால் இதழின் வலிமை அந்நிய ஆட்சியரை அதிரவைத்தது. அந்த இதழுக்கு எதிராக ஆட்சியாளர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். எனவே அல் ஹிலால் நின்று போனது. ஆனால் ஆஸாத் ஒய்ந்துவிடவில்லை. 'அல் பஸாக்' என்ற புதிய இதழிலும் தொடர்ந்தன. ஆட்சியாளர்கள் அவர் மீது கடும் நடவடிக்கைகள்எ எடுத்தனர். டில்லி, பஞ்சாப், சென்னை மாகாணம் ஆகியவற்றுக்குள் ஆஸாத் நுழையக்கூடாது என் அரசினர் தடை உத்தரவு விதித்தனர். 1915 ம் ஆண்டில் அவரது சொந்த மாநிலமான வங்காளத்திலிருந்தே வெளியேற்றப்பட்டார்.

போராட்ட முறையை மாற்றிக்கொள்ள விரும்பிய ஆஸாத் தன்னைப்போலவே விடுதலை வேட்கை கொண்டு போர்க்குரல் எழுப்பிக் கொண்டிருந்த மவ்லானா முகமது அலி, மவ்லானா ஷவ்கத் அலி ஆகிய இரண்டு சகோதரர்களுடன் கரம் கோர்த்தார். அலி சகோதரர்களுடன் இணைந்துப் பல போராட்டங்களில் ஈடுபட்டார். இந்நிலையில், மூன்று நான்கு ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டார்கள்.

இங்கு ஒரு முக்கியமான தகவலைக் குறிப்பிட்டாக வேண்டும். இந்திய அரசியல் அரங்கில் அண்ணல் காந்தியடிகளின் தலைமை தோன்றுவதற்கு முன்னேரே தமது எழுத்துப் பணியின் விளைவாகக் கடுங்காவல் தண்டனை அனுபவித்தவர் ஆஸாத். காவலில் வைக்கப்பட்டிருந்த ஆஸாத்தையும் அலி சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நூற்றுக்கணக்கான கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மூவரையும் விடுதலை செய்யக் கோரி 60,000 பெருமக்கள் கையெழுத்திட்டு ஒரு கடிதம் ஆட்சியாளர்களிடம் தரப்பட்டது. அதன் விளைவாக, 1920 ம் ஆண்டுத் தொடக்கத்தில் ஆஸாத் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான சில நாட்களில் 1920 ஜனவரி 8 ல் டில்லியில் காந்தியடிகளை ஆஸாத் சந்தித்தார். இருவரின் முதல் சந்திப்பே அதுதான். அது வரலாற்றுச் சிறப்பு மிக சந்திப்பாக வரலாற்றில் பதியப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் சிறப்புக் கூட்டத்தில் காந்தியடிகள் தமது ஒத்துழையாமை திட்டத்தை முதல் முறையாக அறிவித்தார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் நாகபுரியில் ஆஸாத் தலைமையில் நடைபெற்ற கிலாபத் இயக்க மாநாட்டிலும் ஒத்துழையாமை இயக்கம் இறுதி செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

"ஒத்துழையாமை இயக்கத்துக்கும் குர்ஆனின் ஆதரவு உண்டு"  என்று ஆஸாத் அழுத்தமாகக் குறிப்பிட்டார். ஆஸாத்தின் விடுதலைப் போராட்டத்தின் விளைவாக இந்திய உலமாக்கள் மத்தியிலும் விடுதலை எழுச்சி உருவானது. டில்லியில் நடைபெற்ற உலமாக்கள் மாநாட்டில் 500 க்கும் மேற்பட்ட உலமாக்கள் கையெழுத்திட்ட ஃபத்வா வெளியிடப்பட்டது. " முஸ்லீம்கள் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட தங்கள் பட்டங்களைத் துறக்க வேண்டும். ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட சட்டமன்றங்களிலிருந்தும், ஊராட்சி அமைப்புகளிலிருந்தும் வெளியேற வேண்டும்" என்று அந்த ஃபத்வா கட்டளையிட்டது. அது அச்சிடப்பட்டு இந்தியா முழுவதும் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டது.

இக்காலக்கட்டத்தில் இந்து - முஸ்லீம் ஒற்றுமை வியக்கத்தக்க அளவில் நிலவியது. ஒத்துழையாமை இய,ளும் சூழ்ச்சியைக் கையான்டனர். அதன் காரணமாக 1924 ம் ஆண்டிலும், 1927 ம்  ஆண்டிலும் இந்து - முஸ்லீம் கலவரங்கள் தோன்றின. அப்போது, ஆஸாத் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. இரு தரப்பிலுமுள்ள தீவிரவாதிகளின் போக்கை அவர் துணிவுடன் கண்டித்தார்.

"இந்துக்களும் - முஸ்லீம்களும் இந்தியத் தாயின் புதல்வர்கள். ஒருவர் மற்றவரின் மதத்தை தூற்றுவதும், பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதும், ஒரு பிழையும் அறியாத மக்களைக் கொல்லத்தூண்டுவதும், கோயில்களையும், மசூதிகளையும் சேதப்படுத்துவதும் இறைவனை மறுப்பதற்கு ஒப்பானவை. இந்து - முஸ்லீம் பிளவு அந்நிய ஆட்சிக்குத்தான் உதவும்" என வலியுறுத்தினார். அவரது முயற்சியால் இரு முறை ஒற்றுமை நிலை நிறுத்தப்பட்டது. 

1946 ம் ஆண்டில் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் ஆஸாத் கல்வியமைச்சராக பொறுப்பளிக்கப்பட்டார். 1947 ம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்ததும் நாட்டின் முதலாவது கல்விமைச்சராக அவரே இருந்தார். தமது வாழ்வின் இறுதிக் காலம் வரையில் அவர் அந்தப் பொறுப்பை மிகத்திறம்ப நிர்வாகித்தார். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு உற்ற நண்பராகவும், நல்ல ஆலோசராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் ஆஸாத் திகழ்ந்தார். 1958 ம் ஆண்டில் ஆஸாத் அமரரானார்.

மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் ஒரு சிறந்த சிதனையாளர்; ஆற்றல் மிகுந்த எழுத்தாளர்; சமயத்துறை வல்லுநர்; உணமையைச் சொல்வதற்கு அஞ்சாதவர்; ஒழுக்கத்தில் சிறிதும் தவறாதவர்; நாட்டு விடுதலையைத் தமது வாழ்கையின் குறிகோளாகக் கொண்டு செயற்பட்ட மாவீரர். அத்தகைய சான்றோர் அபுல்கலாம் ஆஸாத் அவர்களை அவரது பிறந்த நாளன்று நினைத்துப் போற்றுவது இந்தியர் ஒவ்வொருவரின் கடமையாகும்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்

No comments