புதுசு

நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பு முறை !நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சைவேர், கோரைக்கிழங்கு, பற்படாகம், சந்தனச்சிறாய், பேய்ப்புடல், சுக்கு, மிளகு ஆகிய ஒன்பது சரக்குகளும் வகைக்கு 100 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து, ஒன்றிரண்டாக அரைத்து வெயிலில் 3 மணி நேரம் காய வைக்க வேண்டும். பிறகு, காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்த வேண்டும். இதை 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை பயன்படுத்தலாம். இச்சரக்குகள் எல்லாமே நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்.
மேலே சொன்ன கலவையில் 30 கிராம் எடுத்து, 1 லிட்டர் தண்ணீரில் இட்டு அது கால் லிட்டராக (250 மில்லி) சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், நிலவேம்புக் குடிநீர் தயார். இதைப் ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்துப் பயன்படுத்தலாம். காய்ச்சல் கண்டவர்கள், 3 மணி நேரத்துக்கொரு முறை, இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேளைக்கு 50 மில்லி குடிக்கலாம். 3 வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் வேளைக்கு 30 மில்லி குடிக்கலாம். மூன்று மாதங்கள் முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வேளைக்கு 20 மில்லி கொடுக்கலாம்.

No comments