புதுசு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம்... சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை... விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல்தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது. அந்தமான் அருகே தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இந்திய பெருங்கடல் வரை மேலடுக்கு சுழற்சி பரவியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் விட்டு விட்டு பெய்து வந்த மழை நள்ளிரவுக்கு பின் கனமழையாக மாறியுள்ளது. பலத்த காற்றுடன் மழை கொட்டியது குறிப்பிடத்தக்கது. 

செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை, செம்பனார்கோயில் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாற பகுதிகளில் 2 மணி நேரம் கன மழை கொட்டியது. வருகிற 29-ம் தேதி தென்கிழக்கு வங்ககடலில், தமிழகம் இலங்கை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. 

சென்னையில் நேற்று இரவு 9 மணியளவில் பெய்ய தொடங்கிய இந்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்துள்ளது. கோட்டூர்புரம், அடையாறு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சைதாப்பேட்டை, கே.கே.நகர், கிண்டி, அண்ணாசாலை போன்ற இடங்களில் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 

விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல்
கனமழை காரணமாக சென்னையில் 30க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளது. 348 பயணிகளுடன் ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த விமானம் தரையிரங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பியனுப்பப்பட்டது. மேலும் உள்நாட்டு ,வெளிநாட்டு விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்
சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். 

No comments