புதுசு

சௌதி அரேபியா-இஸ்ரேல் : ரகசிய கூட்டணியின் மர்மம் என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில், அதிகரித்து வரும் இரானின் தாக்கத்தைத் தடுக்கும் நோக்கத்தோடு, சௌதி அரேபியாவும் இஸ்ரேலும் ஒன்றாக சேர்ந்து போராடுகின்றன. இந்த இரு நாடுகளுக்கிடையே வளர்ந்து வரும் உறவு முக்கியமானதாகும். இந்நிலையில் இந்த உறவிற்கு பின்னால் என்ன நிகழ்கிறது என்பதற்கான குறிப்பு அவ்வப்போது வெளிவருகிறது. 

இங்கிலாந்தை சார்ந்த சௌதி அரேபிய செய்தித்தாளான எலாஃப்பிற்கு, இஸ்ரேலின் தலைமை தளபதி காடி ஐசன்கொட் கடந்த வாரம் பேட்டி அளிக்கும்போது, இரானை எதிர்க்கொள்ள சௌதியுடன் திட்டங்களை பரிமாறிக் கொள்ளத் தயாரென்றார்.
"இரு நாடுகளின் விருப்பமும் ஒன்றுதான். இரான் பிரச்சனையை பொறுத்தவரை சௌதியுடன் நாங்கள் முழு ஒப்பந்தத்தில் உள்ளோம்" என்று அவர் கூறினார்.
"இஸ்ரேல் உள்பட எங்கேயும், இஸ்லாமிய மதத்தைத் தூண்டிவிட்டு செய்யப்படும் வன்முறையும் பயங்கரவாதமும் நியாயமாகாது. அது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது" என இஸ்ரேலிய செய்தித்தாளான மாரிவுக்கு, சௌதி இளவரசர் மொஹமத் பின் சல்மானுக்கு நெருக்கமானவரான முன்னாள் சௌதி அமைச்சர் மொஹமத் பின் அப்துல் கரீம் ஈசா தெரிவித்திருந்தார்.


இதனையடுத்து லண்டனில் பேசிய முன்னாள் மூத்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர், தான் மூத்த சௌதி இளவரசர்களை சந்தித்த போது "நீங்கள் இனி எங்கள் எதிரி கிடையாது" என்று கூறியதாக தெரிவித்தார்.
இது போன்ற அறிகுறிகள் ஏதோ விபத்தாக அனுப்பப்படுவதில்லை. இஸ்ரேலுக்கும் சௌதிக்கும் இடையிலான உறவு வலுக்கிறது என தெரியப்படுத்தும் வகையில் இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த உறவு வெளிப்படையாக இருப்பதாக சௌதிக்கு தெரிவிக்கும் நோக்கமும் இதில் உள்ளது.
இஸ்ரேலியர்களின் அரசியல் கலாச்சாரத்தைக் கருத்தில் கொண்டால், சௌதி அரேபியாவை விட நாடுகளிடையேயான உறவு குறித்து வெளிப்படையாக பேசும் போக்குடையவர்கள் அவர்கள். இந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்த நடைமுறை உண்மைகள் மற்றும் சாத்தியங்கள் பற்றி நமக்கு தெரியாது. ஆனால் அது உண்மையாக வளர்ந்து வருகிறது.
இரானின் அச்சுறுத்தல்
இது ஒரு வகையில் பார்த்தால் "சூழ்நிலையில் உருவாக்கப்பட்ட கூட்டணி" எனலாம்.
2003ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படை இராக் மீது நடத்திய போரில் சுன்னி முஸ்லிம் மதப்பிரிவை பின்பற்றிய சதாம் உசேன் அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
சதாம் வீழ்ந்தது முதல் இராக்கில் இரானின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது.


சிரியா உள்நாட்டு போரில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவு தருவதாக இரான் முடிவெடுத்தது அவருக்கு சாதகமாக அமைந்தது. இதனால் தலைநகர் தெஹ்ரான் முதல் மத்திய கடற்பகுதி வரை இரான் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பை அது ஏற்படுத்தியது. இது மத்திய கிழக்கில், இரானின் ஊடுருவலாக சுன்னி முஸ்லிம்களால் விமர்சிக்கப்பட்டது.
எனவே, இரானுக்கும் சௌதிக்கும் இடையேயான பகையானது போர் திறம் மற்றும் மதரீதியாலானதாகும்.
அணு ஆயுதங்களின் நாடாக இரான் ஆகிவிடக் கூடாது என இருநாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இரானின் அணுசக்தி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சர்வதேச உடன்படிக்கை அம்சங்கள் குறித்து இருநாடுகளுக்கும் சந்தேகமில்லை.
எனவே, இஸ்ரேல் மற்றும் சௌதிக்கு இடையே உறவு வலுப்படுவது இரு நாடுகளுக்கும் அர்த்தமுள்ள ஒன்றாகவே உள்ளது.
டிரம்ப் காரணி
இரானின் அதிகரிக்கும் ஆதிக்கம் மட்டும் இங்கு பிரச்சனையல்ல. மற்ற பல முக்கிய காரணிகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக அமெரிக்காவில் டிரம்பின் புதிய ஆட்சி, மத்திய கிழக்கில் ஏற்பட்ட அரபு ஸ்பிரிங் கிளர்ச்சி மற்றும் சிரியாவின் கொடூரமான போர் ஆகியவையும் முக்கிய காரணிகளாகும்.
முதலாவதாக அமெரிக்காவின் புதிய அரசாங்கம் மீது இஸ்ரேலுக்கோ சௌதிக்கோ குற்றச்சாட்டுகள் ஏதும் இருக்கக்கூடாது.
இரு நாடுகளுக்கும் வருகை தந்த டிரம்ப், அவர்களின் உத்திகளை வரவேற்றிருந்தார். மேலும் இரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் போடுவது குறித்து மிகுந்த சந்தேகத்துடன் உள்ளார். முன்னதாக இரான் அணு குண்டு தயாரிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு அதற்கு சில சலுகைகளை அளித்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சக்திகள் இரானோடு 2015ல் செய்துகொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தை தீவிரமாக எதிர்த்த நாடுகள் இஸ்ரேலும், சௌதி அரேபியாவும்.


இரானை நோக்கி தற்போதைய அமெரிக்க அதிபரின் நிலைப்பாடு வேறுவிதமாக இருக்கிறது. அதனை இஸ்ரேல் மற்றும் சௌதி அரேபியா வரவேற்றாலும், அப்பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கை நிலைதடுமாறும் என்பது இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் தெரிந்த ஒன்று.
ரஷியா மற்றும் இரானால், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் சிரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டன.
இருப்பினும், இரானிய செல்வாக்கை கொண்டிருப்பதற்கான நம்பகமான மற்றும் நிலையான கொள்கையை இதுவரை அமெரிக்கா முன்வைக்கவில்லை.

தனது சொந்த நலன்களில் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று சௌதி இளவரசர் முடிவெடுத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. தனது பகுதிகளில் அமெரிக்க ஆதிக்கத்தை குறைத்து ரஷ்யா போன்ற நாடுகள் மீண்டும் திரும்ப இஸ்ரேலும் சௌதியும் தங்களை சரிபடுத்திக் கொள்வது போன்ற உணர்வும் உள்ளது.
இஸ்ரேலியர்களின் அச்சம்

இதில் மேலும் ஒரு அடிப்படை விஷயம் உள்ளது. இரானின் தாக்கத்தை எதிர்ப்பதோடு, தனது ராஜ்ஜியத்தை நவீனப்படுத்த வேண்டும் என இரண்டு உத்திகளை சௌதி இளவரசர் மொஹமத் செயல்படுத்த உள்ளார்.


சௌதிக்கு எதிர்காலம் இருக்கவேண்டுமெனில், மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதில் இளவரசர் தீர்மானமாக இருப்பதாக தெரிகிறது. இந்த மாற்றம், இரானைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்கு இணையாக முக்கியமானதாகும்.
இதனை இஸ்ரேலும் ஏற்றுக் கொள்ளும் என்பதை பல தனி கலந்துரையாடலுக்குப் பின் நம்ப முடிகிறது.
இஸ்ரேல் - சௌதியின் இந்த செயல்பாடுகள் எதுவரை செல்லும்? அது பல விஷயங்களை பொறுத்தே இருக்கும்.  சௌதி அரேபியாவை மாற்றும் முயற்சியை கையில் எடுத்துள்ள இளவரசர் மொஹமத், அதில் வெற்றிப் பெறுவாரா? இரானின் தாக்கத்தை முடக்க சௌதியின் முயற்சி சாத்தியமாகுமா?
அடிப்படையில், சௌதி-இஸ்ரேலின் உறவு வெளிப்படுமானால், பாலத்தீனிய முன்னனியில் முன்னேற்றம் தேவைப்படும். வெளிப்படையாக இஸ்ரேலை ஆங்கீகரிக்கும் முன், இந்த முன்னேற்றம் வரவேண்டும் என நீண்டகாலத்துக்கு முன் சௌதி தெரிவித்திருந்தது.
ஓர் அர்த்தமுள்ள அமைதி முறையை புதுப்பித்து, பாலத்தீனிய அரசியலமைப்பு உறுதிப்படுத்தப்படும் வரை சௌதி-இஸ்ரேல் "கூட்டணி" நிழலில் இருப்பதே நல்லது.

Source:bbc tamil

No comments