புதுசு

துபையில் பெயில் ஆன விரக்தியில் RTA மீது குற்றம் சுமத்தி ஈமெயில் அனுப்பிய இந்தியர் கைது!துபை போக்குவரத்து துறையின் (RTA) மீது குற்றம் சுமத்தி அவர்களுக்கே ஈமெயில் செய்த 25 வயது இந்தியர் ஒருவர் RTA புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். துபை போக்குவரத்து துறையின் கீழ் தான் வாகன ஓட்டுனர்களுக்கு சோதனை நடத்தி லைசென்ஸ் வழங்கும் பிரிவும் இயங்குகிறது.

பொதுவாக துபையில் யாரும் எளிதில் வாகன ஓட்டுனர் லைசென்ஸ் பெற்றுவிட முடியாது. நீண்ட காலம் எடுத்துக் கொள்வதுடன் அதிக பணத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கும் என்றாலும் அத்திபூத்தாற்போல் சிலருக்கு சிக்கிரமே லைசென்ஸ் கிடைத்துவிடுவதும் உண்டு. மேலும், தங்களுடைய தாய்நாடுகளில் பல வருடம் வாகனம் ஓட்டிய அனுபவம் உள்ளவர்கள் கூட மாதக்கணக்கில் காத்திருக்க நேரிடும், சிலருக்கு வருடங்கள் ஆகலாம்.

இந்நிலையில், இதுபோல் பலமுறை முயன்று விரக்தியான இந்தியர் ஒருவர் துபை போக்குவரத்து துறையை சாடி, ஏழைகளின் பொருளாதாரத்தை துபை போக்குவரத்துத் துறை வாகன ஓட்டும் சோதனை என்ற பெயரில் சுரண்டுவதாகவும், வேண்டுமென்றே ஓட்டுனர் சோதனையின் போது பெயில் ஆக்கப்படுவதாகவும், அப்படி பாதிக்கப்பட்ட ஏழைகளில் தானும் ஒருவர் என்றும், இன்னும் சில அவதூறான வார்த்தைகளை இணைத்து தனது ஐபோனிலிருந்து துபை போக்குவரத்து துறைக்கே ஈமெயில் அனுப்பியுள்ளார்.

ஈமெயிலை கண்ட துபை போக்குவரத்து துறையினர் போலீஸாரிடம் புகார் தர, ஈமெயில் அனுப்பிய இந்தியர் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவரது வழக்கு மீண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.

Source: Gulf News

No comments