புதுசு

பாசனத்திற்காக தருமபுரி சின்னாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிச்சாமி உத்தரவுதர்மபுரி மாவட்டத்தின் முக்கிய அணையான சின்னாறு அணை தொடர் மழையால் இந்த ஆண்டில் 2வது முறையாக நிரம்பியுள்ளது. இந்நிலையில் பாசனத்திற்காக சின்னாறு அணையிலிருந்து வரும் 7ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம், சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளது.மக்களின் வேண்டுகோளை ஏற்று, தருமபுரி மாவட்டம், சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு பாசனத்திற்காக 7.12.2017 முதல், வினாடிக்கு 25 கன அடி வீதம் புதிய பாசன பரப்பிற்கு முறை வைத்தும், 19.1.2018 முதல் பழைய ஆயக்கட்டு பாசன பரப்பிற்கு ஒரு முறையும், மொத்தம் 444.14 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

No comments