புதுசு

சவுதியில் தொழிலாளர்களின் ஆண்டு விடுமுறைகளில் விதி மீறும் முதலாளிகளுக்கு 10,000 ரியால் அபராதம்!


சவுதி அரேபியாவின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சகம் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது அதன்படி, தொழிலாளர்களின் ஆண்டு விடுமுறைகள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு நிறைவேற்றாமல் தவறிழைக்கும் முதலாளிகள் 10,000 ரியால் அபராதம் கட்ட நேரிடும்.

அதேபோல் சவுதியர் அல்லாத பிற நாட்டு தொழிலாளர்களை அவர்களின் விசா பெர்மிட்டுகளின் அடிப்படையில் வேலை வாங்காமல் பிற இடங்களில் வேலை செய்யப் பணித்தாலும் 10,000 ரியால் அபராதம் உண்டு.

தொழிலாளர் துறை அமைச்சக அலுவலகத்தில் தங்களது நிறுவனத்தை பதிவு செய்யாவிட்டாலோ அல்லது அவ்வப்போது நிறுவனத்தின் தரவை புதுப்பிக்காவிட்டாலோ 10,000 ரியால் அபராதம் இதற்கும் உண்டு.

தொழிலாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்களுடைய பாஸ்போர்ட், இகாமா, மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கார்டுகளை வைத்திருந்தாலும் 2,000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் ஒரு முதலாளி அரசு வரையறுத்துள்ள நிறுவன ஒழுங்குமுறைகளை பேணவிட்டாலோ அல்லது ஒத்துழைக்க மறுத்தாலோ இதற்கும் 10,000 ரியாலை அபராதமாக கட்ட வேண்டும்.

தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தது தொடர்பான ஆவணங்களை தொழிலாளர் அமைச்சக அலுவலகத்தில் மாதமாதம் சமர்பிக்கத் தவறினால் 10,000 ரியால் தண்டம் செலுத்த வேண்டும்.

ஒரு நிறுவனத்திற்கு தேவையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்களின் சுகாதரம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை முறையாக பேணாவிட்டால் 15,000 ரியால் அபராதம் வசூலிக்கப்படும்.

ஒரே குற்றத்தை 2 முறை செய்தாலோ அல்லது விதிக்கப்பட்ட அபராதத்தை 1 மாத காலத்திற்குள் செலுத்தத் தவறினாலோ அபராதங்கள் இரு மடங்காக உயர்த்தப்படும்.

Source: Saudi Gazette
தமிழில்:அதிரை நியூஸ்

No comments