புதுசு

ஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட்டுமானப் பணிகள் நிலவரம்!

ஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட்டுமானப் பணிகள் 2020 ஆண்டிற்குள் நிறைவுறும்.

தாயிப் நகரில் செயல்பட்டு வரும் தற்போதைய பிரதேச விமான நிலையத்திற்கு (Ta'if Regional Airport) மாற்றாக புனித மக்கா நகரிலிருந்து சுமார் 117 கி.மீ தூரத்திலும் தாயிப் நகரிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 40 கி.மீ தூரத்திலும் புதிதாக கட்டப்பட்டு வரும் தாயிப் விமான நிலையம் சுமார் 48 மில்லியன் சதுரடி பரப்பளவில் அமையவுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய இதன் கட்டுமானங்கள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் நிறைவுறும் என்றும் இதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 6 மில்லியன் பயணிகளை பிரதானமாக ஹஜ், உம்ரா பயணிகளை கையாள முடியும் என சவுதி அரேபியாவின் விமான நிலையங்களுக்கான ஆணையம் (GACA) தெரிவித்துள்ளது.

தற்போதைய பழைய தாயிப் பிரதேச விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 1.5 மில்லியன் பயணிகளை மட்டுமே கையாளும் திறனுடையது. இந்த பழைய நிலையம் புதிய விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டு ஒரே விமான நிலையமாக மாற்றப்படும். இது பிரதேச விமான நிலையமாக இருந்தாலும் சில அரபுநாடுகளின் சர்வதேச சேவைகளும் தாயிப் விமான நிலையத்தில் நடைபெற்று வருகின்றது.

மேலும் அஸீர் மாகாணம் 'குன்புதாஹ்' (Al Qunfudhah  எனும் துறைமுக நகரில் சுமார் 24 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள புதிய 'குன்புதாஹ் விமான நிலைய' பணி ஒப்பந்தங்கள் இன்னும் 60 நாட்களுக்குள் இறுதி செய்யப்படவுள்ளன. இது மக்காவிலிருந்து சுமார் 290 கி.மீ தூரத்திலும் ஜித்தாவிலிருந்து 340 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

அதேபோல் ஜித்தா மாநகரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 2018 மே மாதம் முதல் இயங்கத் துவங்கும் என புனித மக்காவிற்கான அமீர் இளவரசர் காலித் அல் பைசல் தெரிவித்தார்.

Source: Saudi Gazette / Saudi Business / Wikipedia
தமிழில்: அதிரை நியூஸ்:

No comments