புதுசு

குலுங்கியது மும்பை மாநகரம்: சட்டப்பேரவையை முற்றுகையிட திரண்ட 50 ஆயிரம் விவசாயிகள்
வேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் புனேயில் இருந்து நடந்து மும்பைக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை மாநில சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற அனைத்து இந்திய கிசான் சபா(ஏஐகேஎஸ்)அமைப்பு விவசாயிகளை திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகிறது. இதில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் புனேயில் இருந்து செவ்வாய்கிழமையில் இருந்து மும்பைக்கு நடந்து வந்துள்ளனர்.
 
ஏறக்குறைய 180 கி.மீ. தொலைவை 5 நாட்களாக நடந்து இன்று நண்பகலில் மும்பை மாநகரத்தின் தாதர் எல்லையை இந்த பிரமாண்டமான விவசாயிகள் கூட்டம் அடைந்துள்ளது.
புனே நகரில் புறப்படும்போது, 30 ஆயிரம் விவசாயிகளாக இருந்த நிலையில், மும்பைக்கு வந்தபோது, 50 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. சாலை ஓரமெங்கும் செங்கொடிகளுடன் பிரம்மாண்ட வரிசையில் விவசாயிகள் மும்பை நகருக்குள் வந்துள்ளதால் நாளை நகரமே குலுங்கப்போகிறது.
விவசாயிகள் வருகையால் மும்பை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காக போலீஸார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், விரிவான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டம் குறித்து அனைத்து இந்திய கிசான் சபா(ஏஐகேஎஸ்) அமைப்பின் தலைவர் அசோக் தாவ்லே கூறியதாவது:
விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வனத்துறை நிலங்களை விவசாயிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஆதிவாசிகளிடம் இருந்து கைப்பற்றிய நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும், மஹாராஷ்டிராவின் நீரை குஜராத் மாநிலத்துக்கு பகிர்ந்தளிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி புனே நகரில் இருந்து மும்பைக்கு 30 ஆயிரம் விவசாயிகள் நடைபயணம் வந்துள்ளோம்.

கடந்த செவ்வாய்கிழமை நடை பயணத்தை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை மும்பையை வந்துடைந்துள்ளோம். புறப்படும்போது 30 ஆயிரமாக இருந்தது, மும்பையை அடைந்தபோது, 50 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. திங்கள்கிழமை மாநிலசட்டப்பேரவை முன் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருக்கிறோம். முன்னதாக மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜனைச் சந்தித்து எங்கள் கோரி்க்கைகளை தெரிவித்தோம் அவர், முதல்வர் பட்நாவிஸிடம் தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்.
எங்களின் போராட்டம் நாளை அமைதியான முறையில் இருக்கும். மும்பை மாநகரம் எங்களின் போராட்டத்தால் குலுங்கப்போகிறது. எங்களின் பேரணியை நாளை காலை 11 மணிக்கு மேல் தொடங்கி மாலையில் முடிக்கிறோம் என்பதால், மாணவர்களுக்கும், அலுவலகம் செல்பவர்களுக்கும் இடையூறு இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த போராட்டத்துக்கு சிவசேனா கட்சி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

No comments