புதுசு

குரங்கணி தீ விபத்தில் சென்னையைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் உயிரிழப்பு: தேனி ஆட்சியர் தகவல்


குரங்கணி தீ விபத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் பலியானதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்திருக்கிறார். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர்.
சென்னையில் இருந்து சென்னை டிரக்கிங் கிளப் மூலமாக சென்ற 20 பேரில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கினர். இதில் முதல்கட்டமாக 22 மாணவ, மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காட்டுக்குள் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கூறும்போது, "குரங்கணி தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மீட்கப்பட்ட 27 பேரில் 10 பேருக்கு எவ்வித காயமும் இல்லை. உயிரிழந்தவர்களில் மூவர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் விவரம்:
சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, விபின், அருண் ஆகியோர் உயிரிழந்தனர். இதேபோல், ஈரோட்டைச் சேர்ந்த விவேக், தமிழ்ச்செல்வி, விஜயா ஆகியோர் உயிரிழந்தனர்.
36 பேர் சென்றனர்:
மலையேற்றத்துக்காக 24 பேர், 12 பேர் என 2 குழுக்களாக மொத்தம் 36 பேர் சென்றனர். இந்நிலையில், திடீரென காட்டுத்தீ ஏற்பட்டதால் அவர்கள் சிக்கிக் கொண்டனர். குரங்கணி மலைப்பகுதியில் கிராமத்தினரே தீ வைப்பதாக புகார்கள் நிலவும் நிலையில் கிராம மக்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
முதல்வர் விரைகிறார்..
இதற்கிடையில், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்கிறார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவர் மருத்துவமனைகளுக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்திக்கிறார்.
தகவல் மைய எண்கள் அறிவிப்பு
குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து அறிய 9445000586, 9994793321  என்ற தகவல் மைய என்னை தொடர்பு கொள்ளலாம்.​No comments