புதுசு

அதிபர் பதவிக்கான கால வரம்பை நீக்கியது சீன நாடாளுமன்றம்

ஒருவர் சீன அதிபராக இரண்டு முறைக்குமேல் பதவி வகிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை சீன நாடாளுமன்றமான 'தேசிய மக்கள் காங்கிரஸ்' நீக்கியுள்ளது.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் தற்போதைய சீன அதிபரான ஷி ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அதிபராக நீடிப்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த தேசிய மக்கள் காங்கிரஸின் ஆண்டு கூட்டத்தின்போது அரசமைப்புச் சட்டத்தில் இதற்கான முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியுமென்ற விதியை சீனா 1990 களிலிருந்து கடைபிடித்து வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டின்போது அடுத்த அதிபரின் பெயரை முன்மொழியும் நடைமுறையை தற்போதைய சீன அதிபரான ஷி ஜின்பிங் தவிர்த்தார்.
மாறாக, ஷி ஜின்பிங்கின் பெயரையும், கொள்கையையும் கட்சியின் அமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்யும் முடிவுக்கு கட்சி மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் தமது அரசியல் அதிகாரத்தை நிலைபெறச் செய்த ஷி, கட்சி நிறுவனரான மா சேதுங்குக்கு இணையான நிலைக்கு தம்மை உயர்திக்கொண்டார்.

ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் வரும் 2023 ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், அதிபருக்கான பதவிக்கால வரம்புகளை அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று பிப்ரவரியில் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்தது.
மற்ற நாடுகளின் நாடாளுமன்றங்களை போன்று சீன மக்கள் குடியரசின் மிக உயர்ந்த அவையாக தேசிய மக்கள் காங்கிரஸ் உள்ளது.


No comments