புதுசு

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் அமேசான் தலைவர்போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெஸோஸ் முதலிடம் பிடித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
உலக அளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி உலக அளவில் பெரும் பணக்காரராக பல ஆண்டுகளாக வலம் வந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பின்னுக்கு தள்ளப்பட்டு முதலிடத்தை அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெஸோஸ் பிடித்துள்ளார்.
புதிய பட்டியலின்படி, 112 பில்லியன் டாலர்களுடன் (சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) ஜெப் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து கடந்த 12 மாதங்களில் 59 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 90 பில்லியன் அமெரிக்க டாலர் (6 லட்சம் கோடி ரூபாய்)சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் பில்கேட்ஸ் உள்ளார்.
மூன்றாவது இடத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளரும், ஆலோசகருமான வாரண் பப்பட் உள்ளார். பிரான்ஸ் தொழிலதிபர் பெமர்டு அமுல்ட் நான்காவது இடத்தில் உள்ளார். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸ்ர்க்கர் பெர்க் ஐந்தாவது இடம் பிடித்துள்ளார்.
உலக அளவில் அதிக செல்வம் கொண்ட 20 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சீன நாட்டு செல்வந்தர்களான மா ஹூடெங், ஜாக் மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். டென்சென்ட் இணையதள நிறுவனத்தின் தலைவரான ஹூடெங் 17-வது இடத்தில் உள்ளார். அலிபாபா நிறுவனர் ஜாக் மாவும், 20 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதுமட்டுமல்லாமல், மா ஹூடெங் ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப், 544-வது இடத்தில் இருந்து 766-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.  அவரது சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டாலர்களாக (சுமார் 8,500 கோடி ரூபாய்) சரிந்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ள அதிக பணக்காரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 585 பேருடன் முதலிடத்தில் உள்ளது. சீனா 373 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தப் பட்டியலில் புதிதாக 259 பேர் இடம் பிடித்துள்ளனர். அதேபோல் 121 பேர் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர்.

No comments