புதுசு

புனிதமிகு கஃபாவின் கிஸ்வா துணி தயாரிப்பு ~ சிறப்புப் பார்வை
1926 ஆம் ஆண்டு முதல் மக்கா கைவினைஞர்களால் நெய்யப்பட்டு வருகிறது கஃபாவின் கிஸ்வா துணி.

புனிதமிகு மக்காவில் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு புனித கஃபாவின் மேல் போர்த்தப்படும் 'கிஸ்வா' எனும் கருப்புப் போர்வை நெய்யும் தொழிலகம் துவக்கப்பட்டது. அதற்கு முன் எகிப்து போன்ற நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு வந்தது.

அப்போதைய மன்னர் அப்துல் அஜீஸ் அவர்கள் ஹிஜாஸ் பகுதியை வெற்றி கொண்டதை தொடர்ந்து மன்னரின் உத்தரவின் பேரில் புனித ஹரம் ஷரீஃப் அருகிலுள்ள அஜ்யாத் எனும் பகுதியில் கிஸ்வா துணியை நெய்யும் தொழிலகம் 1926 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு பின்பு அல் தைஸீர் என்ற பகுதிக்கும் பின்பு தற்போது அமைந்துள்ள அல் ஜவ்து பகுதிக்கும் இட மாற்றங்கள் செய்யப்பட்டன.

மன்னர் அப்துல் அஜீஸ் அவர்கள் அன்றைய காலகட்டத்தில் மிகத்திறமையுடன் திகழ்ந்த பல கைவினைஞர்களை பணியிலமர்த்தினார். இந்தப் பணிமனையின் தற்போதைய இயக்குனர் டாக்டர் முஹமது பஜோதா அவர்களின் வார்த்தைகளில் இனி,

கிஸ்வா துணியின் மூலப்பொருட்கள் யாவும் அரேபியா வளைகுடாவிற்கு அப்பாற்பட்ட தேசங்களிலிருந்தே கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக மிக உயர்ரக பட்டு இழைகள், பஞ்சுகள், வெள்ளி மற்றும் தங்க நிற ஜரிகை போன்றவை. உயர்ரக பட்டு இழைகள் கருப்பு மற்றும் பச்சை வண்ண சாயமேற்றப்படுகிறது. முந்தைய நூற்றாண்டுகளில் சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை வண்ணங்களும் பயன்படுத்தப்பட்டன. தற்போது முழுமையாக கருப்பு நிறம் மட்டுமே வெளிப்புறத் தோற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

புனித ஹஜ் காலங்கள் துவங்குவதற்கு முன்பாக 2 மாதங்களுக்கு முன்பே கிஸ்வா தயாராகிவிடும். 700 கிலோ பட்டு, 120 கிலோ வெள்ளி மற்றும் தங்க ஜரிகையும் பயன்படுத்தப்படும். முழு கிஸ்வா போர்வையும் 47 தனித்தனி துண்டங்களாக தயாரிக்கப்படும். ஒரு பகுதி துண்டின் அளவு 14 மீட்டர் நீளமும் 101 செ.மீ அகலமும் உடையதாகும். இந்த கிஸ்வா போர்வையை இணைக்க தரைப்பகுதியில் செப்பு (Copper Rings) வளையங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கிஸ்வா போர்வையின் மீது செய்யப்பட்டுள்ள எம்ராய்டரி வேலைகள் பூர்த்தியாக சுமார் 8 முதல் 10 மாதங்களாகும். கடைசியாக முறையான அதிஉயர்வு ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

தயாரான கிஸ்வா போர்வை வாழையடி வாழையாக புனிதா கஃபாவின் திறவுகோள்களை பாதுகாத்து வரும் 'பனு ஷைபா' கோத்திரத்தின் குடும்ப உறுப்பினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும். இது வருடந்தோறும் 'அல் தர்வியா தினம்' எனப்படும் துல்ஹஜ் மாதம் 8 ஆம் நாள் நடைபெறும்.(புனித மக்காவை வெற்றி கொண்ட பின்னும் ரஸூல் (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா காலத்திலும் கஃபாவின் பொறுப்பாளர்களாக இருந்த பனு ஷைபா கோத்திரத்தாரை மன்னித்து திறவுகோளை மீண்டும் ஒப்படைத்து அவர்களை கண்ணியப்படுத்திய நிகழ்வு இன்றும் தொடர்கிறது)

பின்பு ஹரம் ஷரீஃபிற்கு எடுத்து வரப்படும் கிஸ்வா துணி துல்ஹஜ் பிறை 10 அன்று பஜ்ர் தொழுகை முடிந்தவுடன் பழைய கிஸ்வாவை அகற்றிவிட்டு புதியதை அஸர் நேரத்திற்குள் போர்த்தப்படும். அவ்வேளையில் புனித ஹஜ் யாத்ரீகர்கள் அனைவரும் அரபா மைதானத்தில் குழுமியிருப்பர்.

துல்ஹஜ் முதல் பிறை முதல் முஹர்ரம் மாதம் 15 வரை கருப்பு நிற கிஸ்வா கஃபத்துல்லாஹ்வின் தரையிலிருந்து 3 மீட்டருக்கு மேலே உயர்த்தப்பட்டு அதற்கு பதிலாக 2 மீட்டர் அகலமுள்ள வெள்ளைத்துணி கொண்டு தற்காலிகமாக போர்த்தப்படும். இதன் மூலம் யாத்ரீகர்களால் சேதமாகாமல் கிஸ்வா பாதுகாக்கப்படுகிறது. ஹஜ் யாத்ரீகர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிய நிலையில் முஹர்ரம் மாத மத்தியில் மீண்டும் பழைய நிலைக்கு கிஸ்வா கீழிறக்கப்படுகிறது.

ஹஜ் காலம் நிறைவுற்ற பின் பழைய கிஸ்வா துணி சிறுசிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு முக்கிய பிரமுகர் மற்றும் மார்க்கப் பணிகளில் ஈடுபாட்டுள்ள நிறுவனங்களுக்கும் அன்பளிப்பு செய்யப்படுகிறது. அவர்கள் அன்பளிப்பாக பெற்ற துண்டு கிஸ்வாக்களை வழிவழியாக நினைவுச் சின்னமாக போற்றி வருகிறார்கள்.

தவறுதலாகவோ அல்லது கூறிய ஆயுதங்களை கொண்டோ வெகுசிலர் கிஸ்வாக்களை வெட்டி எடுத்துச் செல்வதே பெரும் சவாலாகவுள்ளது. எங்களுடைய கைவினைஞர்கள் ஒவ்வொரு மணிநேரமும் ஆய்வு செய்து பழுதடைந்துள்ள பகுதியை நுணுக்கமாக சீர்செய்வதும் இன்னொருபுறம் நடைபெற்று வருகிறது.

மக்காவைச் சேர்ந்த சுமார் 250 கைவினைக் கலைஞர்கள் ஷிப்டுகள் அடிப்படையில் 24 மணிநேரமும் கிஸ்வா தயாரிப்பு வேலைகளை செய்கின்றனர். இங்கு கம்ப்யூட்டர் மயப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய தையல் மெஷின் உள்ளது. இந்த மெஷினில் 16 மீட்டர் நீளமுள்ள துணியை நெய்ய முடியும். இங்கு வேலை செய்பவர்கள் 3 வருடங்களில் ஓய்வு பெறுவர் அவர்களுக்கு பதிலாக புதிய கைவினைஞர்கள் இப்பணியை தொடர்வர். மேலும் இங்கு தொழிற்நுட்பக் கல்வியகங்களில் பயிலும் 70 மாணவர்களுக்கும் வருடந்தோறும் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

சுமார் 30 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்ட தையல் மெஷின்களை மாற்றிவிட்டு முற்றிலும் புத்தம் புதிய நவீன கம்ப்யூட்டர் அடிப்படையில் இயங்கும் தையல் மெஷின்களை நிறுவ சவுதி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறி நிறைவு செய்தார் டாக்டர் முஹமது பஜோதா.


Source: Saudi Gazette
தமிழில்அதிரை நியூஸ்

No comments