புதுசு

சவுதியில் புனித ஜம் ஜம் கிணறு விரிவாக்கப் பணிகள் நிறைவு !சவுதி புனிதமிகு கஃபாவில் ஜம்ஜம் கிணறு மேம்பாட்டு பணிகளுக்காக வைக்கப்பட்ட தடுப்புக்கள் அகற்றப்பட்டதால் புதிய பொலிவுடன் புனித கஃபா

கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வந்த ஜம்ஜம் கிணறு மேம்பாடு மற்றும் நீரேற்றுப்பாதைகள் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து புனிதமிகு கஃபாவின் பல பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கள் அகற்றப்பட்டு உம்ரா யாத்ரீகர்கள் உட்பட அனைத்து வணக்கசாலிகளையும் மடஃப் (Mataf) பகுதியில் தவாப் சுற்ற அனுமதிக்கத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகள் 3 கட்டங்களாக நடைபெற்று வந்தன. இன்ஜினியர், தொழில்நுட்ப நிபுணர்கள் (Technicians), சிறப்பு ஊழியர்கள் (Specialized Workers), தொழிலாளர்கள் என சுமார் 1,000 பேர் இரவு பகலாக 24 மணிநேரமும் வேலைபார்த்து சுமார் 3,000 சதுரடியில் நடைபெற்ற இப்பணியை நிறைவு செய்துள்ளனர்.

இவ்வேலைத் திட்டத்தில் ஜம்ஜம் கிணற்று நீரை சேமித்து வைக்கும் வசதிகளை ஏற்படுத்துதல் (Storing), ஜம்ஜம் நீரை நவீன பம்ப்பிங் மூலம் இறைத்தல் (Pumping) மற்றும் மிக சுத்தமான, பாதுகாக்கப்பட்ட நிலையில் (Ensuring Cleanliness & Safety) தேவையான இடங்களுக்கு கொண்டு சேர்க்கும் உள்ளார்ந்த வசதிகளை ஏற்படுத்துதல் (Distributing) ஆகியனவும் மேற்கொள்ளப்பட்டன.

புனித கஃபத்துல்லாவில் இருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த புனிதமிகு ஜம்ஜம் கிணறு உலகிலுள்ள ஒரே மிகப்பழமையான கிணறாகும் (The Zamzam well is believed to be the oldest well on earth). இந்த கிணறு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து நீரை வழங்கி வருகிறது. வெறும் 30 மீட்டர் மட்டுமே ஆழமுள்ள இந்த வாழும் அதிசய கிணற்றிலிருந்து நொடிக்கு 18.5 லிட்டர் நீர் பம்ப்பிங் மூலம் எடுக்கப்படுகிறது.

தினமும் இங்கிருந்து 120 டன் ஜம்ஜம் தண்ணீர் பாதுகாக்கப்பட்ட டேங்கர்களில் மதினா மாநகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. அதேபோல் நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பட்ட (Sterile containers) சுமார் 7,000 கன்டெய்னர்கள் மூலம் மக்காவின் புனித ஹரம் ஷரீஃப் வளாகம் முழுவதும் ஜம்ஜம் நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

Source: Saudi Gazette
தமிழில்: அதிரை நியூஸ்

No comments