புதுசு

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: பல்வேறு தரப்பினர் வரவேற்பு
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். மத்திய அமைச்சரவையில் நேற்று விவாதித்து கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்னாத்கோவிந் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசின் இந்த அவசர சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம்: மக்களின் மனவலியை புரிந்து கொன்டு மத்திய அரசு உடனடியாக அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது மோசமான சம்பவங்களை ஏற்படுத்தும் என்று கூறினார். கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலமே பாலியல் பலாத்காரக்கொடுமைகளை தடுக்க முடியும் எனவும் கூறினார். குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை செயல்ப்படுத்தினால் மட்டுமே குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்படும். சிறார்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒரு வருடத்திற்குள் விசாரணையை முடித்து தண்டனை வழங்க வேண்டும்.

ராஜ்யசபா எம்.பி. காங்கிரஸ் பி.எல். புனிதா: நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசமான சூழ்நிலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க கோரும் அவசர சட்டம் தேவையான ஒன்றாகும். சிறார்களுக்கு எதிராக குற்றங்களில் விசாரணை காலம் வரையறுக்கப்படாதது. பெண்களுக்கு எதிராக பாலியல் சம்பவங்களில் தண்டனை காலம் குறைப்பு உள்ளிட்ட அம்சங்களில் திருத்தங்கள் வேண்டும்.

போக்சோ எனப்படும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனையிலிருந்து தூக்கு தண்டனையாக அதிகரித்தயுள்ளது. 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். வழக்கின் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமின் அளிக்கப்படாது உட்பட பல அம்சங்களுடன் அவசர சட்டம் இயற்றப்பட்டது.

No comments