புதுசு

வடகொரியா: கிம் ஜாங்-உன்னின் நம்பிக்கைக்குரிய 9 பேர்

வடகொரிய தலைவரின் நம்பிக்கைக்கு உரிய ஒன்பது பேர்
தென் கொரிய மண்ணிற்கு சென்று அந்நாட்டு அதிபர் முன் ஜே- இன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், சிறப்பு பிரதிநிதிக் குழுவையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.


இந்த சிறப்புக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள், கிம் ஜாங்-உன்னின் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று கூறப்படுகிறது. வட கொரியாவின் இதுபோன்ற ஒரு மூத்த பிரதிநிதிக் குழுவை தங்கள் நாட்டில் இதுவரை வரவேற்றதில்லை என தென் கொரியா கூறுகிறது.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, கிம் ஜாங்-உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான அறிக்கைப் போர்கள் நடைபெற்றன. தற்போதைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புக்கு பின்னர் வட கொரிய உயர் தலைவர் கிம் ஜாங்-உன், இந்த ஆண்டு அமெரிக்க அதிபரையும் சந்திப்பார் என்று நம்பப்படுகிறது.


கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங்
கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங்


1987ம் ஆண்டு பிறந்ததாக நம்பப்படும் கிம் யோ-ஜாங், மறைந்த தலைவர் கிம் ஜாங்-இல்லின் இளைய மகளும், கிம் ஜாங்-உன்னின் சகோதரியும் ஆவார்.
கிம் ஜாங்-உன்னை விட 4 ஆண்டுகள் இளையவரான கிம் யோ-ஜாங், சகோதருடன் சேர்ந்து சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்றவர். சகோதரருக்கு மிகவும் நெருங்கியவர் என்றும் கூறப்படுகிறது.

இவர், வட கொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் சக்தி வாய்ந்த செயலரின் மகனான சேயே ரொங்-ஹெ-வை திருமணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கட்சியின் பரப்புரைத் துறையில் மேற்கொள்ளும் பணிகளின் வழியாக தன்னுடைய சகோதரரின் பிம்பத்தை பாதுகாக்கும் முக்கிய பணிகளால், அண்மை ஆண்டுகளில் கிம் யோ-ஜாங் பொது மக்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

வட கொரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் இவருக்கு தொடர்புகள் இருப்பதாக இவரும் அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

தென்கொரியாவின் யோங்சாங்கில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கிம் யோ-ஜாங் கலந்துக் கொண்டார்.
தனது சகோதரர் கிம் ஜாங்-உன்னின் கடுமையான முடிவுகளில் பலவற்றில் கிம் யோ-ஜாங்கின் பங்களிப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். வட கொரியாவின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக கிம் யோ-ஜாங் கருதப்படுகிறார்.


கிம் யோங்-நம் 
கிம் யோங்-நம்

90 வயதான கிம் யோங்-நம் நாட்டில் தனது நீண்ட பணிக்காலத்தில் மூன்று ஆட்சியாளர்களைக் கண்டிருக்கிறார். அரசுமுறை பயணமாக பல முறை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுளார்.

கடந்த ஆண்டு இரான் அதிபர் ஹாசன் ரூஹானி இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக் கொண்டபோது அந்த விழாவில் பங்கேற்றார். வட கொரியாவின் உயர் தலைமை மீதான அவரது விசுவாசம் ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டதில்லை.

தென் கொரியாவின் யோன்ஹப் செய்தி நிறுவனம், கிம் யோங்-நம் பற்றி ஒரு வட கொரிய நபர் கூறியதாக வெளியிட்ட செய்தி இது: "அவர் ஒருபோதும் எந்தவித தவறையும் செய்ததில்லை, அதனால்தான் வட கொரியா போன்ற ஒரு நாட்டில் நிர்வாகம் மாறியபோதும், தனது இடத்தை தக்க வைத்து கொள்வதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்."

 சோய் ஹவி
சோய் ஹவி

வட கொரிய விளையாட்டு துறை அமைச்சர் சோய் ஹவி அரசு தொலைக்காட்சியில் இயல்பான தோன்றுவதற்காக அறியப்படுபவர்.
வட கொரியாவின் தலைமை கண்காணிப்பு வலைப்பதிவின்படி, 1980களில் மத்தியில் 'Sea of Blood' என்ற நிகழ்ச்சியின் மேலாளராக முக்கியமான பங்கு வகித்தார் சோய் ஹவி.

தனது வாழ்க்கையில் பெரும்பாலான பகுதியை நாட்டின் கலைத்துறைக்காக பங்களித்திருக்கும் சோய் ஹவி, நாட்டின் முதல் பெண் பாப் இசைக்குழுவான மோரன்பாங்க் என்ற குழுவை நிறுவுவதில் ஒரு முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது.

 கிம் யோங்-சோல்
கிம் யோங்-சோல்


வட கொரியாவின் சர்ச்சைக்குரியத் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் கிம் யோங் சோல், நாட்டின் ராணுவ புலனாய்வு துறைத் தலைவராகவும் பதவி வகித்தவர். 2010ஆம் ஆண்டு யோன்பியோங் தீவில் தாக்குதல் நடத்தப்பட்டபோதும், தென் கொரிய போர்க்கப்பல் ராக்ஸ் சேனன் (ROKS Cheonan) மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியிலும் இவரது வியூகம் இருந்ததாக கூறப்படுகிறது.

கிம் மிகவும் நையாண்டி செய்பவர், அவருடன் வேலை செய்வது எளிதானது அல்ல என்று லீடர்ஷிப் வாட்ச் அறிக்கை கூறுகிறது.
2007இல் தென்கொரியாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது, தென் கொரியாவின் ஒரு திட்டத்தை நிராகரித்த அவர், "முன்மொழிவுகளால் நிரம்பிய ஒரு பெட்டி உங்களிடம் இருப்பதுபோல் தோன்றுகிறது" என்று தெரிவித்தார்.

 ரீ சூ-யோங்
 ரீ சூ-யோங்ரீ சோல் என்றும் அழைக்கப்படும் ரீ சூ-யோங், கிம் ஜாங்-உன் குடும்பத்துடன் நீண்டகால தொடர்பு கொண்டவர். கிம் ஜோங்-இல்லுடன் ஒன்றாக கல்வி பயின்றவர் ரீ சூ-யோங். சுவிட்சர்லாந்தில் கிம் ஜாங்-உன் படிக்கும்போது, ரீ சூ-யோங்கின் பிள்ளைகளும் அவருடன் ஒன்றாக படித்தனர்.
கிம் ஜோங்-உன் தனது தந்தையைப் போல ரீ சூ-யோங்கை மதிப்பதாக வட கொரியா லீடர்ஷிப் வாட்ச் அறிக்கை கூறுகிறது.
வட கொரியாவின் பிரதிநிதியாக பல முறை அவர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். 2014இல் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், தற்போது சர்வதேச விவகாரத் துறைத் தலைவராகவும் வெளிநாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் பொறுப்பையும் வகிக்கிறார்; ஐ.நா தூதராகவும் மதிக்கப்படுகிறார்.


 ரீ மியோங்-சூ
ரீ மியோங்-சூ
2016ஆம் ஆண்டில் நாட்டின் ராணுவத் தலைவராக பொறுப்பேற்றார் ரீ மியோங்-சூ. இவருக்கு முன்னர் கிம் ஜாங்-உன்னிடம் பணிபுரிந்த இரண்டு ராணுவத் தலைவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது; மற்றொருவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.


கொரியப் போரில் கலந்து கொண்ட ரீ மியோங்-சூ, ராணுவ வியூகங்களை வகுப்பதில் தலைசிறந்தவர் என கருதப்படுகிறார். வட கொரியாவின் லீடர்ஷிப் வாட்ச் அறிக்கையின் கூற்றுப்படி, கிம் ஜாங்-உன்னை நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க தயார்படுத்தியவர் ரீ மியோங்-சூ.
கிம் ஜோங்-இல் மறைந்த சில ஆண்டுகள் வரை காணாமல் போயிருந்த அவர், தற்போது மீண்டும் நாட்டின் உயர் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

 பாக் யோங்-சிக் 
 பாக் யோங்-சிக்

2015ஆம் ஆண்டு முதல் வட கொரியாவின் பாதுகாப்பு அமைச்சராக (மக்கள் ஆயுதப்படையின் அமைச்சகம்) பதவியில் இருக்கிறார் பாக் யோங்-சிக். இந்த அமைச்சகம் ராணுவ நிர்வாகம், மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், வெளிநாட்டு ராணுவங்கள் மற்றும் தூதர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
பாக் யோங்-சிக்கின் மேற்பார்வையில்தான் வடகொரிய ராணுவ மறுசீரமைப்பு நடைபெற்றது.


 ரீ யோங்-ஹோ 

ரீ யோங்-ஹோ


வட கொரியாவின் அணுசக்தி திட்டத்தின் பிரதான ஆலோசகராகவும், பிரிட்டன் உட்பட பல நாடுகளின் தூதராகவும் பணியாற்றியவர் ரீ யோங்-ஹோ.

2016 ல் அவர் வெளியுறவு அமைச்சர் பதவிக்கு வந்த ரீ யோங்-ஹோ, வட கொரிய தலைவர்களிலேயே அதிகம் பேசுபவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா "போரை தூண்டுவதாக" குற்றம் சாட்டியதுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அச்சுறுத்தல்கள் "நாய் குரைப்பதை போன்றவை" என்றும் விமர்சித்தார் ரீ யோங்-ஹோ.

ரீ சோன்-க்வோன்

ரீ சோன்-க்வோன்

கொரிய மறு ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் வட கொரிய அமைப்பான, 'கொரியாவின் சமாதான மறு ஒருங்கிணைப்பு குழு'வின் (CPRK) தலைவர் ரீ சோன்-க்வோன்.

அண்மையில் நடந்துமுடிந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா பங்கேற்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவர் ரீ சோன்-க்வோன்.

தென் கொரியா ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்தவர் ரீ சோன்-க்வோன். 2010இல் தென் கொரிய போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வட கொரிய அரசு மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை ரீ சோன்-க்வோன் நிராகரித்தார்.


No comments