புதுசு

வட்டி பொருளாதாரம் வளர்ச்சி தருமா?
உலக வங்கியில் அதிக கடன் பெற்ற நாடுகளில் முதலிடம் வகிக்கிறது இந்தியா. 1945 முதல் 2017 டிசம்பர் வரையிலான கடன் தொகை 109.28 $ பில்லியன் டாலர் (சுமார் 71 லட்சம் கோடி ரூபாய்) என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய உண்மை. இதில் திருப்பி செலுத்தியது, ரத்து செய்யப்பட்டது போக, இன்னும் செலுத்த வேண்டிய தொகை 37.22 $ பில்லியன் டாலர் (சுமார் 24 லட்சம் கோடி ரூபாய்). அதாவது, நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த பட்ஜெட்டின் அளவான 22.18 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம் நம் கடன் தொகை!. (அதிக கடன் பெற்ற முதல் பத்து நாடுகளில், இரண்டாமிடம் வகிக்கும் பிரேசில் 58 பில்லியன் டாலர் தான் பெற்றுள்ளது. 50 பில்லியன் டாலர் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறோம் என்பது வறுமையிலும் ஓர் பெருமை  )


ஒவ்வொரு நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) வாசிப்பிலும் அகமகிழ்ந்து புது திட்டங்களை புகழ்ந்து பேசும் நாம், அது நம் பணத்தில் போடப்பட்ட திட்டமா? அல்லது உலக நாடுகளை சுரண்டும் உலக வங்கியின் (உதவியோடு கூடிய?!) திட்டமா என விவாதிப்பதில்லை. கடன் வாங்கி திட்டம் போட்டு தம்பட்டம் மட்டுமே அடிக்கும் கூட்டத்திடம் நாடு சிக்குண்டதால் நாம் மீளும் வாய்ப்பை, அவர்கள் கைக்கு எட்டுமளவுக்கு வைக்கவில்லை. “நாட்டின் வளர்ச்சி” என்ற ஒற்றைக் கோஷம் கொண்டு கேள்வி கேட்கும் உரிமையை கூட நிராகரிக்கின்றனர் ஆட்சியாளர்கள்!

நடப்பு நிதியாண்டில் 5.95 லட்சம் கோடி கடன் வாங்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கிறது மோடி அரசின் கடைசி பட்ஜெட். ஒட்டுமொத்த பட்ஜெட்டின் அளவில் (22.18 லட்சம் கோடி) 27 சதவிகிதம் கடன் வாங்கி ஆட்சி செய்து கொண்டு, நாடு வளர்கிறது என்றும் நம்பவும் சொல்கிறார்கள். (நம்பிவிடுங்கள்…! மறுத்தால் ஆன்டி இந்தியன் ஆக்கிவிடுவார்கள்).
இவை ஒருபுறமிருக்க, 5.31 லட்சம் கோடியை வட்டி கட்டுவதற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது அரசு. ஆக, வாங்கிய கடனில் 90 சதவிகிதம் வட்டி கட்ட மட்டுமே…! நாம் வாங்கும் அரிசி, பருப்பு உட்பட அனைத்து பொருட்களிலிருந்தும் அரசுக்கு கிடைக்கும் ஒரு ரூபாய் வரிப்பணத்தில் 24 காசுகளை வட்டி கட்டி விட்டு மீதமுள்ள 76 காசுகளில் தான் திட்டங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

“கையில் இருந்தால் கள்ளப்பணம்” ஆகிவிடும் என்று பயமுறுத்தி, நம் பணத்தையெல்லாம் வங்கியில் போடச் செய்துவிட்டு, மோடி வகையறாக்களுக்கு மோசடி செய்து நாட்டை விட்டு ஓடும் வசதியையும் ஏற்படுத்தியிருக்கிறது, திராணியற்ற மத்திய அரசு . தொடர்ந்து நடைபெறும் மோசடிகளை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசு, முந்தைய அரசின் மீது பழி சுமத்தி அரசியல் சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறது.
(வங்கித்துறை வளர்ச்சி (Banking Sector Support) நிதியாக 2 பில்லியன் டாலர் தொகை முந்தைய அரசால் கடனாக பெறப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.)

கல்வி, விவசாயம் போன்ற பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு குறைவாக நிதி ஒதுக்கும் அதே வேளையில், “தூய்மை இந்தியா” திட்டத்திற்காக 1.5 பில்லியன் டாலர்களை, 2021 ம் ஆண்டு முதல் 2039 ம் ஆண்டு வரை திருப்பி செல்லத்தப்படும் கடனாக பெற ஒப்பந்தம் போடப்பட்டு, நிதிகளை பெற்று வருகிறது நம் தேசம். அசுத்தத்தின் காரணிகளை சீர் செய்யாமல், தூய்மை என்ற பெயரால் விளம்பரத்திற்கு மட்டுமே பெரிதும் பயன்படுத்தப்படும் “ஸ்வச் பாரத்”-ஐ கடன் வாங்கி நிறைவேற்றத்தான் வேண்டுமா?

ஒவ்வொரு குடிமகனையும் கடனாளியாக்கி, வட்டியை சுமத்தும், இந்த வட்டி பொருளாதாரம் வளர்ச்சியை தருமா? ஐந்தாண்டுகள் கழித்து நமக்குதேவைப்படுவதை இன்றே நமக்கு தேவை என நம்ப வைப்பதும், நம் நிதி திறனுக்கு மேலானவற்றை செய்ய தூண்டி வட்டியில் சிக்க வைப்பதும் உலக வங்கியின் தந்திரம்தான். சூழ்ச்சியில் மாள்வதும் , மீள்வதும் நம் கையிலே…!
தகவல் உபயம் : உலக வங்கி தரவுகள். (International Bank for Reconstruction and Development (IBRD) and the International Development Association (IDA) – Loan Statements)

No comments