புதுசு

இந்தியாவின் பெரும்பாலான பகுதி நெருப்பு புள்ளிகளால் அடையாளம்...எச்சரிக்கும் நாசா..!
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ள படங்களில் இந்தியாவின் பல பகுதிகள் நெருப்புப் புள்ளிகளால் அடையாளமிடப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களாக எடுக்கப்பட்ட படங்களில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் சில தென்மாநிலங்களும் இத்தகைய நெருப்பு புள்ளிகளால் அடையாளமிட்டு காட்டப்பட்டுள்ளன. காட்டுத்தீ போன்றவற்றால் வெப்பம் அதிகம் இருப்பதை இந்த புள்ளிகள் காட்டுகின்றன என்றாலும், அறுவடைக்குப் பிறகு பயிர்க்கூளங்களை கொளுத்திவிடுவதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பயிர்க்கூளங்களை கொளுத்திவிடுவது பரவலாக அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் ஒன்றாகும். பயிர்க்கூளங்களை எரியவிடுவதன் மூலம் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு தரும் கூலி மிச்சப்படும் என்று எண்ணுகின்றனர். கிட்டத்தட்ட 14% கருப்பு கார்பன் உமிழ்வுக்கு பயிர்க்கூளங்களை எரியவிடுவது தான் காரணம் என்று கூறப்படுகிறது. அவை அதிகளவில் மத்திய பிரதேசத்தில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

விவசாயிகளுக்கு இதுகுறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டதாகவும் ஆனால் இந்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நடைமுறையால் புவிவெப்பமயமாதலுக்கு காரணமான கார்பன் சுற்றுச்சூழலில் வெளியேற்றப்படுவது அதிகரிக்கும் எனவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். மேலும், காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகையால் அளவுக்கு அதிகமாக காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இது தடுக்கப்பட வேண்டும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments