புதுசு

பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

 பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பு


பாலியல் வழக்கின் குற்றவாளி சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜோத்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


குற்றவாளி

16 வயது சிறுமி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 2013 ம் ஆண்டு முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசாராமை கோர்ட்டிற்கு அழைத்து வந்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அவர் அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி மதுசூதனன் தீர்ப்பு வழங்கினார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஆசாராம் உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய நீதிபதி 2 பேரை விடுவித்தார்.


தண்டனை

தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தண்டனை காலம் குறித்து வாதம் நடந்தது. ஆசாராமுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதம் வைக்கப்பட்ட நிலையில், அவரது வயதை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என ஆசாராம் வழக்கறிஞர் வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பிற்பகலில் தண்டனை அறிவித்தார்.அதில் சாமியார் ஆசாராமிற்கு ஆயுள் தண்டனையையும், அவரது உதவியாளர்கள் ஷில்பி, சரத் ஆகியோருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.அவசர சட்டத்திற்கு பின்

பலாத்காரத்திற்கு எதிரான மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்த பின்னர், வழங்கப்படும் முதல்தீர்ப்பு இதுவாகும். 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனையும், அந்த வயதுக்கு மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

பலத்த பாதுகாப்பு

ஆசாராம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் ராஜஸ்தான், அரியானா, உ.பி., குஜராத், பஞ்சாப், ம.பி., பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டுரோன் மூலம் நிலைமையை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசாராமின் ஆசிரமங்களுக்கும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜோத்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 பாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

No comments