புதுசு

துபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு

 துபையில் மிதக்கும் ஹோட்டலாக மாற்றப்பட்ட குயின் எலிஸாபெத்-2 என்ற கப்பல் இன்று திறக்கப்பட்டது.

சுமார் அரை நூற்றாண்டு காலம் பிரிட்டனின் பயணிகள் கப்பலாக சேவையில் ஈடுபட்ட பிரசித்திபெற்ற குயின் எலிஸாபெத் - 2 சுருக்கமாக QE2 என்ற கப்பல் 100 மில்லியன் டாலர் செலவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு மிதக்கும் நட்சத்திர ஹோட்டலாக இன்று துபையில் திறக்கப்பட்டது. 13 அடுக்குகளை கொண்ட இந்த சொகுசு ஹோட்டலின் 7 அடுக்குகளில் முதற்கட்டப் பணிகள் முடிவடைந்த நிலையின் இதன் முழுமையான பணிகள் எதிர்வரும் 2018 அக்டோபரில் நிறைவுறும்.

துபை போர்ட் ராஷித் துறைமுகத்தில் நிலையாக நிறுத்தப்பட்டுள்ள இந்தக் கப்பல் இதன் கடந்தகால வரலாற்றை கூறும் அருங்காட்சியகமாகவும் செயல்படும், நிகழ்கால நவீன வசதிகளும் கூடுதலாக இடம் பிடித்துள்ளன. பழைய அதே கட்டமைப்புகள், வர்ணங்கள், உட்புற அலங்காரங்கள் என புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதில் செயல்பட்டு வந்த 13 உணவகங்களும் மீண்டும் அதேபெயரிலேயே இயங்கும் என்பதுடன் முதற்கட்டமாக 5 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. லைப்ரரி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலை பற்றிய சிறு குறிப்புக்கள்:
1. இந்தக் கப்பலுக்கு இங்கிலாந்தின் ஆறாம் ஜார்ஜ் மன்னரின் மனைவியான ராணி எலிஸாபெத் என்பவரை போற்றும் வகையில் பெயர் சூட்டப்பட்டது. (தற்போதுள்ள ராணி எலிஸாபெத் அல்ல)

2. 1969 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி முதல் 2008 நவம்பர் 27 ஆம் தேதி வரை சுமார் 50 ஆண்டுகளில் சுமார் 6 மில்லியன் கடல் மைல்களை கடந்து சேவையில் ஈடுபட்டுள்ளது.

3. சுமார் 294 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 1,777 பயணிகள் உட்பட 1,892 வரை பயணம் செய்யலாம்.

4. 10 ஆண்டுகளுக்கு முன் உடைக்கும் நோக்குடனே இந்த கப்பல் துபை துறைமுக நிர்வாகத்தால் வாங்கப்பட்டது என்றாலும் முடிவு கைவிடப்பட்டு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நட்சத்திர ஹோட்டலாக மாறியுள்ளது.

5. 1982 ஆம் ஆண்டு பாக்லாந்து தீவு (Falkland Island) உரிமை தொடர்பாக இங்கிலாந்திற்கும் அர்ஜென்டினாவிற்கும் நடைபெற்ற போரின் போது இங்கிலாந்து வீரர்களை அழைத்துச் செல்லவும் பயன்பட்டது.

6. அட்லாண்டிக் கடலை சுமார் 800 தடவைக்கு மேல் கடந்துள்ளதுடன் சுமார் 2.5 மில்லியன் பயணிகளையும் சுமந்து சென்றுள்ளது.

7. இந்த ஹோட்டலில் ஓர் இரவு தங்க 150 டாலர்கள் முதல் அதிகப்பட்சம் 15,000 டாலர்கள் வரை அறைகளுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

8. இந்த கப்பலை ஹோட்டலாக மாற்றும் பணி முழுமையாக முடிவடையும் போது சுமார் 800 அறைகள் வரை தயாராகிவிடும்.

9. 1970 ஆண்டு அட்லாண்டிக் மகா சமுத்திரத்தை 3 நாட்கள் 20 மணிநேரம் 43 நிமிடங்களில் அதிவிரைவாக கடந்த சாதனையையும் வைத்துள்ளது.

10. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியால் தாமதமாகி வந்த இதன் மராமத்துப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்குள் வேகமெடுத்து முடிந்துள்ளது.

Sources: Gulf News / Emirates 247 / Wikipedia
தமிழில்:அதிரை நியூஸ்

No comments