புதுசு

தமிழகம் தழுவிய திருக்குர்ஆன் கிராத் போட்டியில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வென்ற அதிரை மாணவர்தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்தவர் சேகுனா ஆலிம். இவரது மகன் அல்ஹாபிழ் அஹமத் ஜாபர் (வயது 23).  விருதுநகர் மாவட்டம் வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியில் இறுதி ஆண்டு ஆலிம் கல்வி மற்றும் இளங்கலை வணிகவியல் கல்வி பயின்று வருகிறார். இவர் அதிராம்பட்டினம், பண்டாரவாடை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற கிராத் போட்டிகளில் கலந்துகொண்டு தொடர்ந்து முதல் பரிசினை வென்றுள்ளார்.

இந்நிலையில், நாகை மாவட்டம், தோப்புத்துறையில் புனித திருக்குர் ஆன் போட்டி நடைபெற்றது. இதில், கிராத் போட்டியில் மொத்தம் 3 சுற்றுகள் நடத்தப்பட்டன. முதல் சுற்றில், பாண்டிச்சேரி பிரதேசம் உட்பட தமிழகம் தழுவிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 30 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இரண்டாம் சுற்றில் 28 பேர் தகுதி பெற்றனர். பின்னர் நடந்த மூன்றாம் சுற்றில் 16 பேர் மட்டும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில், முதல் பரிசினை அதிராம்பட்டினத்தை சேர்ந்த அல்ஹாபிழ் அஹமத் ஜாபர் முதல் பரிசினை வென்று சாதனை படைத்தார். இவருக்கு தோப்புத்துறை படேசாஹிப் தர்ஹா வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்  ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார். இதையடுத்து, சாதனை மாணவருக்கு அரபிக்கல்லூரி பேராசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், திருப்பூரை சேர்ந்த மாணவருக்கு இரண்டாம் பரிசு ரூ. 50 ஆயிரம்,  காயல்பட்டினத்தை சேர்ந்த முகமது சரீப் என்ற மாணவனுக்கு மூன்றாம் பரிசு ரூ. 25 ஆயிரம், ஆறுதல் பரிசு ரூ. 5 ஆயிரம் (13 நபர்களுக்கு), மக்தப் மதரஸா மாணவ, மாணவிகளுக்கு நடந்த கிராஅத் போட்டியில் முதல் பரிசு ரூ. 20 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 10 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரம், ஆறுதல் பரிசு ரூ. 2,500 (2 நபர்களுக்கு) வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை தோப்புத்துறை முஸ்லிம் ஜமாஅத் மன்றம், துபாய் வாழ் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம், தோப்புத்துறை அன்னை ஃபாத்திமா மகளிர் (ரலி) அரபிக்கல்லூரி நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

 
 

No comments