புதுசு

உலகின் மிக பிஸியான 20 வான் தடங்களில் துபை ~ குவைத் தகுதி!


உலகின் மிக பிஸியான 20 வான் தடங்களில் துபை – குவைத் தடமும் இடம்பெற்றது.

உலகின் மிகவும் பரபரப்பான 20 விமான தடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மலேஷியாவின் கோலாலம்பூர் - சிங்கப்பூர் இடையேயான வான் தடமே மிகவும் பிஸியான தடமாக தேர்வு பெற்றுள்ளது. இத்தடத்தில் நாள் ஒன்றுக்கு 84 சேவைகள் நடைபெறுகின்றன. இத்தடத்தில் மலேஷியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா உட்பட பல விமான நிறுவனங்கள் சேவை வழங்குகின்றன. இத்தடத்தில் கடந்த 2017 மார்ச் முதல் 2018 பிப்ரவரி முடிய 12 மாதங்களில் சுமார் 30,500க்கு மேற்பட்ட விமான சேவைகள் நடைபெற்றுள்ளன.

கோலாலம்பூர் - சிங்கப்பூர் இடையேயான பயண நேரம் 1 மணிநேரத்திற்கும் குறைவாகும் என்றாலும் விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் சேர்த்தால் சுமார் 5 மணிநேரங்கள் எடுத்துக் கொள்ளும். இந்நிலையில், 2026 ஆம் ஆண்டிற்குள் இயக்கும் நோக்குடன் கோலாலம்பூர் - சிங்கப்பூர் இடையே 90 நிமிடங்களில் செல்லும் அதிவேக ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் ஓடத்துவங்கினால் விமான பயணம் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் 2வது பிஸியான வான் தடமாக ஹாங்காங் - தைபே (தைவான்) தேர்வு பெற்றுள்ளது. இவற்றிற்கிடையே கடந்த 12 மாதங்களில் 28,887 விமான சேவைகள் நடைபெற்றுள்ளன.

3வது இடத்தில் உள்ள சிங்கப்பூர் - ஜகார்த்தா (இந்தோனேஷியா) இடையே 27,304 விமான சேவைகள் நடைபெற்றுள்ளன.

துபை – குவைத் இடையேயான விமான தடம் உலகின் 9வது பரபரப்பான தடமாகவும், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் முதன்மை பிஸியான வான் தடமாகவும் தேர்வு பெற்றுள்ளது. கடந்த 12 மாதங்களில் இத்தடத்தில் சுமார் 15,332 விமான சேவைகளின் மூலம் சுமார் 2.7 மில்லியன் பயணிகள் பறந்துள்ளனர். இத்தடத்தில் எமிரேட்ஸ், பிளை துபை, குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜஸீரா ஏர்வேஸ் ஆகிய விமான நிறுவனங்களே பெரும்பான்மையான சேவைகளை வழங்கி வருகின்றன.

உலகின் பரபரப்பான முதல் 20 விமான தடங்களின் பட்டியலில் 14 தடங்கள் ஆசிய நாடுகளை சேர்ந்தவை. ஐரோப்பாவில் 2, வட அமெரிக்காவில் 2, வட அமெரிக்கா – ஐரோப்பாவிற்கு இடையே 1, மத்திய கிழக்கில் 1 என தேர்வாகியுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: அதிரை நியூஸ்

No comments