புதுசு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.622 கோடியில் புதிய முனையம் ~ டெண்டர் வெளியீடு!திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபை, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு விமான சேவையும், சென்னைக்கு உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே அதிவேகமான வளர்ச்சியைப் பெரும் விமான நிலையங்களில் திருச்சி முக்கிய இடத்தை பிடித்துள்ளதால், இங்கிருந்து பிற நாடுகளுக்கு விமானங்களை இயக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, திருச்சி விமான நிலையத்தை விரிவு படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஆண்டுக்கு 3.52 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில், ரூ. 920 கோடியில் புதிய பயணிகள் முனையம், வான் போக்குவரத்து கட்டுப்பாடு அறை உள்ளிட்டவற்றை கொண்ட புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டம் திட்டமிடப்பட்டது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் துறைகளிடமிருந்து தடையில்லா சான்றுகள் கிடைத்துவிட்ட நிலையில், உட்கட்டமைப்பு பணிகள் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இஜிஐஎஸ் நிறுவனம் தயாரித்து அளித்தது. இதற்கு கடந்தாண்டு அக்டோபர் மாதமே இந்திய விமான நிலைய ஆணையக்குழுமத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டது. எனினும் கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், விமான நிலையத்தின் புதிய முனைய பணிகளை முதல் கட்டமாக ரூ. 621.98 கோடியில் மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையக்குழுமம் முடிவு செய்துள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் அறிவிப்பு கடந்த 21 ந் தேதி வெளியிடப்பட்டது. இதன் மூலம் திருச்சி  விமான நிலைய பிரமாண்ட புதிய முனையம் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்; 
புதிய முனையம் அமைக்கும் பணி பல்வேறு கட்டங்களாக பிரித்து மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமாக கட்டிடங்கள், சாலை, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிகல் உள்ளிட்ட பணிகள் ரூ.621.98 கோடியில் துவங்க உள்ளது. ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணி ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும். அதன்பின்னர் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பணிகளுக்கான ஒப்பந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்' என்றனர்.
 

No comments