புதுசு

அதிக உப்பு பயன்பாட்டினால் சிறுநீரகமும், இதயமும் பாதிக்கும்

இயற்கையின் படைப்பில் மனிதனைத் தவிர எந்த உயிரினமும் உப்பைச் சேர்த்துக் கொள்வதில்லை. நாவின் சுவைக்கு அடிமைப்பட்டுப்போன மனிதர்களாலே இந்நிலை ஏற்படுகிறது. இந்தியா போன்ற வெப்பம் மிகுந்த நாடுகளில் வியர்வையின் மூலமாக உப்பு வெளியேறுகின்ற போது கூட நாளொன்றுக்கு 5 முதல் 6 கிராம் உப்பு சேர்த்துக் கொண்டால் போதுமானது. ஆனால் பலரும் 20 முதல் 25 கிராம் உப்பை உணவில் சேர்த்துக் கொள்கிறோம். காரம் மிகுதி உணவில் அதை சமப்படுத்த உப்பைச் சேர்க்கின்றனர். கருவாடு, காயவைத்த இறைச்சி, ஊறுகாய், வற்றல்கள், அப்பளம் போன்ற பொருட்கள், புளிக்குழம்பு, மீன்குழம்பு போன்ற குழம்பு வகைகளிலும் சிப்ஸ், காரவகைச் சிற்றுண்டிகளிலும் அளவிற்கு அதிகமாக உப்பு சேர்க்கப்படுகிறது.

சோடியம் குளோரைடு எனப்படும் உப்பில் 40 சதவீதம் சோடியம் எனப்படும் ரசாயனப்பொருள் உள்ளது. இந்தச் சோடியம் உடலில் தங்குவதனால் சிறுநீரகமும், இதயமும் பெரிதும் இடர்பட நேரிடும். மேலும் இந்த உப்பு ரத்த அழுத்தத்தை பெரிதும் உயர்த்தும். எனவே சமைக்கப்பட்ட உணவுகளை குறைத்து இயற்கை உணவுகளான காய்கள், பழங்கள், விதைகளை உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக் கொண்டால் உடல் நலம் சீர்படும். இயற்கை உணவில் சோடியம் மிகவும் குறைவாகவே உள்ளது. பதிலாக பொட்டாஷியம் மிகுதியாக இருக்கிறது. உயர்ரத்த அழுத்தத்தை குறைக்கின்ற திறனும் பொட்டாஷியத்திற்கு உண்டு.

No comments