புதுசு

அமீரகத்தில் அந்நியர்களை அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் 5 லட்சம் திர்ஹம் அபராதம்!


 அமீரக பெடரல் சைபர் கிரைம் சட்டம் எண். 5 / 2012 இல் குறிப்பிட்டுள்ளபடி, அமீரகத்தில் வாழ்பவர்கள் (ரெஸிடென்ட்ஸ்) எவராவாது அடுத்தவர்களின் அந்தரங்க உரிமைகள் பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால் குறைந்தது 150,000 முதல் 500,000 திர்ஹம் வரை அபராதம் கட்ட நேரிடுவதுடன் 1 வருடம் சிறை தண்டனையையும் அனுபவிக்க நேரிடும் எனக் கூறுகிறது.

மேற்காணும் சட்டப்படி கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக துபை போலீஸ் அறிவித்துள்ளது, ஏன் இந்த கைது? அவர் செய்த குற்றமென்ன?

துபை போக்குவரத்து துறையின் (RTA) தலைமை வாடிக்கையாளர் மையத்திற்கு (Customer happiness center head quarters) வருகை தந்த ஒருவர் அங்கு அழுது கொண்டிருந்த ஒருவரை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்தார். அவர் நினைத்தது போலவே லைக்ஸ் & ஷேர்களை அள்ளினார் ஆனால் தவறான தகவலை பரப்பியதற்காக போலீஸார் அவரை அள்ளிக் கொண்டு சென்றனர்.

Cars Taxi எனப்படும் தனியார் டேக்ஸி நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றும் ஒருவருக்கு 20,000 திர்ஹம் அபராதம் வந்துள்ளது. இந்த அபராதம் ஏன்? எதற்காக? எப்படி? என விசாரிக்க அந்த டிரைவரின் உறவினர் துபை போக்குவரத்து துறையின் தலைமை வாடிக்கையாளர் மையத்திற்கு வந்துள்ளார். வந்தவர் கார்ஸ் டேக்ஸியின் ஊழியர் அல்ல ஆனால் வீடியோ எடுத்தவர் கார்ஸ் டேக்ஸியின் டிரைவர் தன் மீது விதிக்கப்பட்ட அபராதத்திற்காக அழுகிறார் என பதிவு போட்டுள்ளார். 20,000 திர்ஹம் அந்த டிரைவரின் மீது எப்படி வந்தது என்பது குறித்த விசாரணையை தற்போது நிழுவையில் உள்ளதாக துபை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

விளைவு, நிழுவையில் ஒரு விசாரணை குறித்து தவறான தகவல் பரப்பியதாக துபை போக்குவரத்து துறை துபை போலீஸாரிடம் புகார் தெரிவிக்க தவறான தகவலை பரப்பியது மற்றும் (அழுத) அந்நபரின் அனுமதியின்றி வீடியோ எடுத்தது ஆகிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சம்பந்தப்பட்ட வீடியோ பதிவாளர்.

Source: Gulf News
தமிழில்:அதிரை நியூஸ்

No comments