புதுசு

சவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் அமைச்சகத்தின் கேட்டரிங் திட்டம் மூலம் உணவு வழங்க முயற்சி!ஹஜ் யாத்திரைக்கு வரும் பன்னாட்டு யாத்ரீகர்கள் சந்திக்கும் பிரச்சனைகளிலேயே பிரதானமானது 'உணவு'. இந்த உணவை முன்கூட்டியே தயாரித்து அந்தந்த அந்நாட்டு மக்களின் தேவை மற்றும் சுவைக்கு ஏற்ப வழங்கும் கேட்டரிங் திட்டத்தை சோதனை முயற்சியாக மீண்டும் கையில் எடுத்துள்ளது ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம். இந்த முயற்சி ஹிஜ்ரி 1424 ஆம் ஆண்டிலேயே முயற்சிக்கப்பட்டு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹஜ் அமைச்சகம், மக்கா மாநகராட்சி, சவுதி உணவு மற்றும் மருந்துகளுக்கான ஆணையம் மற்றும் தவாபா ஆர்கனிஷேசன்ஸ் Tawafa Organisations (ஹஜ் யாத்ரீகர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தரும் குழுக்கள்) ஆகியவை இணைந்து இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக மக்காவின் உம்மல் குரா பல்கலைகழகத்தின் ஹஜ் ஆராய்ச்சி துறையினரால் தவாபா ஆர்கனைஷேசனின் சுமார் 600 ஊழியர்கள், உள்நாட்டு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்ட பயிலரங்கம் நடத்தப்பட்டது.

எதிர்வரும் ஹஜ் சீஸனின் போது சுமார் 15 சதவிகித பன்னாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்ட உணவுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் இவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஹஜ் சீசனின் போது 45 சதவிகித பன்னாட்டு யாத்ரீகர்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குளறுபடி, குறைகள் இன்றி தொடர்ந்து உணவு வழங்குவதற்கான ஆராய்ச்சிகளும் திட்டமிடல்களும் உணவு வழங்களை செம்மைபடுத்தப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கேட்டரிங் திட்ட முயற்சிகள் வெற்றிபெற்றால்,
1. ஹஜ் யாத்ரீகர்களுக்கு சுவையான, தரமான உணவு கிடைக்கும்.

2. பலரும் உணவு தயாரிக்கத் தேவைப்படும் மொத்த நீரில் 75 சதவிகிதத்தை மிச்சப்படுத்தலாம்.

3. உணவு பொருட்களை சேமிப்பதற்காக பயன்படும் சுமார் 18,000 சதுரடி இடம் புனித பள்ளியை சுற்றி மிச்சமாகும்.

4. புனித ஹஜ்ஜின் போது உணவு சமைத்தல் மற்றும் அது தொடாபுடைய பணிகளுக்காக தரப்படும் வேலைவாய்ப்பு விசாக்களின் தேவை 80 சதவிகிதம் வரை குறையும்.

5. யாத்திரையின் உச்ச நாட்களின் போது புனித இடங்களை சுற்றி உணவுப் பொருட்களை ஏற்றிவரும் டிரக் வாகன போக்குவரத்தில் சுமார் 4,500 டிரிப்புகள் குறையும்.

6. புனித இடங்களை சுற்றி குவியும் உணவு குப்பைகளில் சுமார் 20 சதவிகிதம் வரை குறையும் என எதிர்பார்ப்பதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்:அதிரை நியூஸ்

No comments